தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் பஸ்கள் மீண்டும் இயக்கம் முக கவசம் அணிந்து பொதுமக்கள் பயணம்


தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் பஸ்கள் மீண்டும் இயக்கம் முக கவசம் அணிந்து பொதுமக்கள் பயணம்
x
தினத்தந்தி 2 Jun 2020 1:26 AM GMT (Updated: 2 Jun 2020 1:26 AM GMT)

தேனி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் பஸ்கள் நேற்று மீண்டும் இயக்கப்பட்டன. பயணிகள் முக கவசம் அணிந்து பயணம் செய்தனர்.

தேனி, 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 5-வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்து கடந்த 2 மாதங்களாக நிறுத்தப்பட்டு இருந்தன.

இந்நிலையில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் நீங்கலாக 8 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு அந்த மண்டலங்களுக்குள் பஸ் போக்குவரத்து நேற்று தொடங்கியது.

அதன்படி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்கள் ஒரு மண்டலத்தில் உள்ளன. தேனி மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.

மாவட்டத்தில் முன்பு 367 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் நகர்ப்புற பகுதிகளுக்கு 52 பஸ்கள், புறநகர் பகுதிகளுக்கு 119 பஸ்கள், மலைக்கிராமங்களுக்கு 12 பஸ்கள் என மொத்தம் 183 பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பஸ்கள் இயக்கப்பட்டன.

கிருமி நாசினி தெளிப்பு

பஸ்கள் பணிமனைகளில் இருந்து புறப்படும் முன்பு கண்டக்டர்கள், டிரைவர்களுக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ கருவி மூலம் காய்ச்சல் உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டது. பஸ்களில் கிருமி நாசினி தெளித்து பணிமனையில் இருந்து வெளியேற்றப்பட்டது. பயணிகள் சமூக இடைவெளியுடன் பஸ்களில் ஏற அறிவுறுத்தப்பட்டது.

ஒரு பஸ்சில் 34 பயணிகள் மட்டுமே ஏற வேண்டும் என்று பஸ் நிலையத்தில் இருந்த பணியாளர்கள் அறிவுறுத்தினர். அதன்படி, பஸ்சில் ஏறிய பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா? என்று ‘தெர்மல் ஸ்கேனர்’ கருவி மூலம் பரிசோதனை நடத்தப்பட்டது. முக கவசம் அணிந்த பயணிகள் மட்டுமே பஸ்சில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.

முக கவசம், சானிடைசர்

பயணிகள் பஸ்சில் ஏறும் முன்பு அவர்களின் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர் வழங்கப்பட்டது. டிரைவர்கள், கண்டக்டர்களும் முக கவசம், கையுறை அணிந்து பணியாற்றினர். பஸ்களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்தது.

தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தில் 2 மாதத்துக்கு பிறகு பஸ்கள் அணிவகுத்து நின்றன. கிராமப்புற பகுதிகளுக்கும் 2 மாதங்களுக்கு பிறகு பஸ்கள் சென்று வந்தன.

மாவட்டம் முழுவதும் டவுண் பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்டத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்பட்டன. அதேநேரத்தில் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.

Next Story