திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் வந்தது பரிசோதனைக்கு அதிகாரிகள் தாமதமாக வந்ததால் பரபரப்பு


திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் வந்தது பரிசோதனைக்கு அதிகாரிகள் தாமதமாக வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Jun 2020 1:42 AM GMT (Updated: 2 Jun 2020 1:42 AM GMT)

திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் 300 பயணிகளுடன் நாகர்கோவில் வந்தது. ரெயில் நிலையத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் தாமதமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில், 

திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் 300 பயணிகளுடன் நாகர்கோவில் வந்தது. ரெயில் நிலையத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகள் தாமதமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவில் மத்திய, மாநில அரசுகள் சில தளர்வுகள் கொண்டு வந்து உள்ளன. அதில் தமிழகத்தில் சென்னையை தவிர்த்து முக்கிய ஊர்களுக்கு இடையே ரெயில் போக்குவரத்து தொடங்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்தது. இதைதொடர்ந்து தமிழகத்தில் 4 வழித்தடங்களில் மட்டும் ரெயில் போக்குவரத்து நேற்று முதல் தொடங்கியது.

திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கும், மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கும், கோவையில் இருந்து காட்பாடி மற்றும் மயிலாடுதுறைக்கும் என மொத்தம் 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. திருச்சியில் இருந்து நேற்று காலை 6 மணிக்கு புறப்பட்ட இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக நாகர்கோவில் ரெயில் நிலையத்தை மதியம் 12.25 மணிக்கு வந்தடைந்தது. இந்த ரெயிலில் இணைக்கப்பட்டிருந்த 19 பெட்டிகளில் சுமார் 300 பயணிகளுடன் நாகர்கோவிலுக்கு வந்தது.

அதிகாரிகள் தாமதம்

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசார், பயணிகள் அனைவரையும் சமூக இடைவெளி விட்டு நிற்குமாறும், சளி மற்றும் ரத்த மாதிரி எடுக்கும் பரிசோதனை முடிவடைந்த பிறகு ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தினர். இதற்காக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

போலீசாரின் அறிவுறுத்தலின்படி பயணிகள் அனைவரும் சமூக இடைவெளி விட்டு வரிசையாக நின்றனர். இருப்பினும் சுகாதாரத்துறை அதிகாரிகள் சுமார் 1 மணி நேரம் தாமதமாக நாகர்கோவில் ரெயில் நிலையத்து வந்ததாக தெரிகிறது.

பயணிகள் அவதி

இதனால் பரிசோதனை மேற்கொள்ள தாமதமானதை தொடர்ந்து பயணிகள் ரெயில் நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் அவதி அடைந்தனர். மேலும், சில பயணிகள் போலீசார் மற்றும் ரெயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே ரெயில் நிலையத்தில் இருந்த சில பயணிகள் மற்றொரு வழியாக தப்பி ஓட முயன்றனர். இதனைக்கண்ட ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் அவர்களை மடக்கி பிடித்து மீண்டும் ரெயில் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

பின்னர், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மூலம் பயணிகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ரெயில் பயணிகளில் பெயர், முகவரி ஆகியவையும் அதிகாரிகள் சேகரித்தனர்.

நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டது

இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மறுமார்க்கமாக நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து 231 பயணிகளுடன் பிற்பகல் 3 மணிக்கு திருச்சிக்கு புறப்பட்டது? ரெயிலில் சென்ற பயணிகள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. ஊரடங்கு உத்தரவால் ரெயில் நிலையத்தில் செயல்பட்டு வந்த முன்பதிவு கவுண்ட்டர் மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டது.

இதுபோன்று தினசரி செயல்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஊரடங்கு உத்தரவு காலங்களில் ரெயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் தங்களது பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது. அதன்படி நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு கவுண்ட்டரில் பயணிகளுக்கு பணம் திரும்பி வழங்கப்பட்டது. இதற்கிடையே ரெயில் நிலையத்தை கோட்டாட்சியர் மயில், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அப்துல் மன்னார் உள்பட அரசு அதிகாரிகள் பலர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

Next Story