திருப்பரங்குன்றம் கோவிலில் பாகனை கொன்ற யானை திருச்சி மறுவாழ்வு மையத்தில் அடைப்பு


திருப்பரங்குன்றம் கோவிலில் பாகனை கொன்ற யானை திருச்சி மறுவாழ்வு மையத்தில் அடைப்பு
x
தினத்தந்தி 2 Jun 2020 7:15 AM IST (Updated: 2 Jun 2020 7:15 AM IST)
t-max-icont-min-icon

திருப்பரங்குன்றம் கோவிலில் பாகனை கொன்ற யானை திருச்சி மறுவாழ்வு மையத்தில் அடைக்கப்பட்டது.

திருச்சி, 

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள பெண் யானை தெய்வானையை பராமரிக்கும் பாகனாக இருந்து வந்தவர் காளிதாஸ். கடந்த சில நாட்களுக்கு முன் இந்த யானை திடீரென பாகன் காளிதாசை தாக்கி கொன்றது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

யானைப்பாகன் காளிதாசை தெய்வானை தாக்கியது ஏன்?, அதற்கு உடல் ரீதியாக ஏதாவது பிரச்சினையா? அல்லது மதம் பிடித்ததா? என்பது பற்றி கால்நடை டாக்டர்கள் விசாரணை நடத்தி வந்தனர். யானையின் உடல் நிலை பற்றியும் பரிசோதனைகள் செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்கு பின்னர் யானை தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்தது.

திருச்சி மறுவாழ்வு மையம்

இந்நிலையில் அந்த யானை நேற்று காலை ஒரு லாரியில் ஏற்றப்பட்டு திருச்சி-சென்னை சாலையில் சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர். பாளையம் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இந்த மையத்தில் ஏற்கனவே தமிழகத்தின் பல கோவில்களில் இருந்து வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவால் கொண்டு வரப்பட்ட 6 யானைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த யானைகளுடன் தெய்வானை யானை சேர்க்கப்படாமல் தனியாக ஒரு இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளது. வனத்துறை அதிகாரிகள் அதனை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். விரைவில் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Next Story