மதுரை அருகே பட்டப்பகலில் பயங்கரம் 2 பேர் படுகொலை வெறிச்செயலில் ஈடுபட்டவர் கைது


மதுரை அருகே பட்டப்பகலில் பயங்கரம்  2 பேர் படுகொலை வெறிச்செயலில் ஈடுபட்டவர் கைது
x
தினத்தந்தி 2 Jun 2020 2:05 AM GMT (Updated: 2 Jun 2020 2:05 AM GMT)

மதுரை அருகே பட்டப்பகலில் விவசாயியும், அவருடைய நண்பரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

மேலூர், 

மதுரை அருகே  2 பேர் படுகொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விவசாயி

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியை அடுத்த அம்பலக்காரன்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). விவசாயி. இவர் வழக்கம்போல, நேற்று காலையில் தனது வயலுக்கு சென்று இருந்தார். மதிய நேரத்தில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.

வீட்டின் அருகே வந்த போது அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த அண்ணாதுரை (55) அங்கு அரிவாளுடன் வந்து முருகனை வழிமறித்தார். இதை பார்த்ததும் முருகன் அதிர்ச்சி அடைந்து அங்கு இருந்து தப்புவதற்குள், அண்ணாதுரை சரமாரியாக அவரை அரிவாளால் வெட்டியதாக தெரியவருகிறது.

இரட்டைக்கொலை

இதற்கிடையே முருகனின் அலறல் கேட்டு, அவருடைய நண்பர் அழகப்பன் (55) ஓடிவந்து தடுக்க முயன்றுள்ளார். இதில், அவருக்கும் கழுத்தில் வெட்டு விழுந்தது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அண்ணாதுரை அங்கிருந்து ஓடிவிட்டார்.

இதுகுறித்து அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதற்குள் முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயத்துடன் போராடிய அழகப்பன் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக இறந்துபோனது தெரியவந்தது.

கைது

இந்த இரட்டைக் கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். அண்ணாதுரையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த இரட்டை கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா, முன்விரோதம் காரணமாக நடந்ததா, கள்ளத்தொடர்பு விவகாரமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில், 2 பேர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்கு நேரத்தில் இந்த இரட்டைக்கொலை நடந்து இருப்பதால் பதற்றத்தை தணிக்க அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Next Story