நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 28,033 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள் கலெக்டர் ஷில்பா தகவல்
நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 28 ஆயிரத்து 33 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.
நெல்லை,
நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 28 ஆயிரத்து 33 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெறுவது தொடர்பான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந்தேதி தொடங்கி 25-ந்தேதி முடிவடைகிறது. தேர்வு நல்லமுறையில் நடைபெறுவதற்கும், ஓழுங்கீன செயல்பாடுகளை தவிர்க்கவும் மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் தேர்வு மையங்களை பார்வையிட்டு எந்தவித புகாருக்கும் இடம் இல்லாமல் நடைபெறவும், கருத்துகளை கூறவேண்டும். இந்த குழு கலெக்டர் தலைமையில் செயல்படும்.
நெல்லை, சேரன்மாதேவி, வள்ளியூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்களிலும் 311 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் 28 ஆயிரத்து 33 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இதில் மாற்றுத்திறனாளிகள் 165 பேர். இவர்கள் சொல்லும் பதிலை விடைத்தாளில் எழுதுவதற்காக 116 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பாளையங்கோட்டை சிறையில் 36 கைதிகள் தேர்வு எழுத உள்ளனர். நெல்லை கல்வி மாவட்டத்தில் 110 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு 11 ஆயிரத்து 639 மாணவ-மாணவிகளும், சேரன்மாதேவி கல்வி மாவட்டத்தில் உள்ள 93 தேர்வு மையங்களில் 8 ஆயிரத்து 394 மாணவ-மாணவிகளும், வள்ளியூர் கல்வி மாவட்டத்தில் உள்ள 108 தேர்வு மையங்களில் 8 ஆயிரம் மாணவ-மாணவிகளும் தேர்வு எழுதுகிறார்கள்.
முக கவசம் அணிய வேண்டும்
கொரோனா முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வு எழுத வரும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். தேர்வு மையங்களில் தேர்வு நாட்களில் தேர்வு தொடங்கும் முன்பும், முடிந்த பிறகும் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். போலீசார் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டும். தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க நிலையான படைகள், பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 7 வினாத்தாள் கட்டு பாதுகாப்பு மையங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செயல்படுகின்றன. தேர்வு மையங்களில் மின்சார வசதி செய்து தரப்படும். சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். வள்ளியம்மாள்புரம் திருமுருகன் உயர்நிலைப்பள்ளி, கங்கைகொண்டான் அரசு மேல்நிலைப்பள்ளி, நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி, உக்கிரன்கோட்டை புனித பேதுரு மேல்நிலைப்பள்ளி, மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, கண்ணன்குளம் இந்து மேல்நிலைப்பள்ளி, களக்காடு கே.ஏ.எம்.பி.மீரானியா மேல்நிலைப்பள்ளி, இடிந்தகரை பிஷப் ரோச் மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 தேர்வு மையங்களில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர்கள் மணிஷ் நாரணவரே, பிரதீப் தயாள், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், மாநகர துணை போலீஸ் கமிஷனர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story