ஊரடங்கு தளர்வு இருந்தாலும் சுறுசுறுப்பு அடையாத செங்கல் தொழில் தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை
ஊரடங்கு தளர்வு இருந்தாலும் செங்கல் தொழில் சுறுசுறுப்பு அடையாமல் உள்ளது. அந்த பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அரசு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை எழுந்து உள்ளது.
நெல்லை,
ஊரடங்கு தளர்வு இருந்தாலும் செங்கல் தொழில் சுறுசுறுப்பு அடையாமல் உள்ளது. அந்த பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அரசு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரிக்கை எழுந்து உள்ளது.
செங்கல் தொழில்
பண்டைய காலத்தில் சுண்ணாம்புக்கல், பனைவெல்லம், நாட்டுக்கோழி முட்டை ஆகிய கலவையை கொண்டு தயாரிக்கப்பட்ட செங்கல்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் இன்றும் கம்பீரமாக நின்று வரலாற்றை பறைசாற்றுகின்றன. கருங்கற்களை வரிசைப்படுத்தி, சிற்பிகளை கொண்டு செதுக்கி, கோவில் களை கட்டியது போல், வீடுகள் கட்ட செங்கல்களை நமது முன்னோர்கள் பயன்படுத்தி உள்ளனர். அது தற்போது வரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் பணகுடி, வள்ளியூர், பாளையங்கோட்டை, சீவலப்பேரி, சேரன்மாதேவி மற்றும் தென்காசி மாவட்டத்தில் கடையம், மாதாபுரம், வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக செங்கல் தொழில் அதிகமாக உள்ளது.
இங்கு 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வடமாநிலங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் குடும்பத்துடன் இங்கு தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்கள்.
ஊரடங்கு தளர்வு
இங்கு உற்பத்தியாகும் செங்கல்கள் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை மற்றும் கேரள மாநிலம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது வெயில் காலம் என்பதால் கட்டிட பணிகள் தீவிரமாக நடக்கும்.
செங்கல் விற்பனை அதிகமாக இருக்கும். ஒரு செங்கல் ரூ.5 முதல் ரூ.6 வரை விற்பனை செய்யப்படும். ஆனால் தற்போது ஊரடங்கு தளர்வு இருந்தபோதிலும் செங்கல் தொழில் சுறுசுறுப்பு அடையாமல் உள்ளது.
முன்பு செங்கல்களை தொழிலாளர்கள் கைகளால் தயாரித்தனர். தற்போது மிஷின் மூலம் தயார் செய்கிறார்கள். சில சூளைகளில் பழைய முறைப்படி தொழிலாளர்கள் கைகளால் செங்கல் அறுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளர்கள் பலர் ஊரடங்கால் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டனர். சில தொழிலாளர்களுக்கு மட்டும் அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து செங்கல் சூளை உரிமையாளர்கள் பணியில் ஈடுபட செய்து உள்ளனர்.
உற்பத்தி பாதிப்பு
இதனால் செங்கல் உற்பத்தி கடுமையாக பாதித்து உள்ளது. மேலும் கட்டுமான பணிகள் அதிகளவில் நடைபெறாததாலும், மக்களிடம் பணப்புழக்கம் அதிகளவில் இல்லாததாலும் செங்கல் விற்பனையும் சரிவர இல்லை. இதனால் செங்கல் சூளை உரிமையாளர்கள் சூளை நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மேலும் தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே செங்கல் சூளைகளுக்கு மண் எடுக்கும் மற்றும் உரிமம் பெறும் முறையை எளிமைப்படுத்த வேண்டும். குளங்களில் மண் எடுக்க அனுமதி அளித்து செங்கல் தொழிலை ஊக்குவிக்க வேண்டும், செங்கல் சூளையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து உள்ளது.
இதுகுறித்து செங்கல் சூளை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது:-
அரசு உதவி
செங்கல் தயாரிக்க குளங்களிலோ, தனியார் இடத்திலோ மண் எடுக்க அரசிடம் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. அதை லாரிகள் மூலம் செங்கல் சூளைக்கு கொண்டுவர வேண்டும். அதன்பிறகு மண்ணை தண்ணீர் விட்டு குலைத்து செங்கல் அறுக்க வேண்டும். நாட்டு செங்கல் தயாரிக்க அதிக செலவாகிறது. இதனால் மிஷின் வைத்து செங்கல் தயார் செய்கிறோம். அதற்கும் அதிக செலவாகிறது. செங்கல் சுடுவதற்கு விறகும் அதிக விலை கொடுத்து வாங்கப்படுகிறது.
மேலும் ஊரடங்குக்கு முன்பு ஒரு செங்கல் ரூ.6 வரை விற்பனை ஆனது. தற்போது ரூ.5-க்கும், அதற்கு குறைவாகவும் விற்பனை ஆகிறது. இதனால் எங்களால் தொழில் செய்ய முடியவில்லை. எனவே செங்கல் தொழில் வளர்ச்சிக்கு அரசு உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story