தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கம்


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கம்
x
தினத்தந்தி 2 Jun 2020 2:28 AM GMT (Updated: 2 Jun 2020 2:28 AM GMT)

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 50 சதவீத அரசு பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.

தர்மபுரி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. நேற்று முன்தினம் நிறைவடைந்த 5-வது கட்ட ஊரடங்கு உத்தரவு சில கட்டுப்பாடுகளுடன் சிறிது தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து நேற்று முதல் தொடங்கியது. அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டலத்தின் மூலம் 50 சதவீத பஸ்களை 60 சதவீத பயணிகளுடன் இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி 144 டவுன் பஸ்கள், 64 புறநகர் பஸ்கள் என மொத்தம் 208 பஸ்களை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

தர்மபுரி நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அரசு புறநகர் பஸ்கள், தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும், தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து காலை 6 மணி முதல் இயக்கப்பட்டன. இதேபோல் வேறு மண்டலத்தில் உள்ள சேலம் மாவட்ட எல்லைப்பகுதியான தொப்பூர் வரை அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.

தர்மபுரி புறநகர், நகர பஸ் நிலையங்களுக்கு வந்த பஸ்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. முககவசம் அணிந்து வந்த பயணிகள் மட்டுமே பஸ்களில் பின்படிக்கட்டுகள் வழியாக ஏறவும், முன்படிக்கட்டுகள் வழியாக இறங்கவும் அனுமதிக்கப்பட்டனர். பஸ்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பயணிகள் அமர வைக்கப்பட்டனர். பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் முககவசம் மற்றும் கையுறைகள் அணிந்தபடி பணியில் ஈடுபட்டனர்.

தர்மபுரி டவுன் பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டவற்றில் சில பஸ்களின் முகப்பு பகுதியில் வேப்பிலை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. தர்மபுரி புறநகர் மற்றும் டவுன் பஸ் நிலையங்களுக்கு நேற்று பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது. பஸ் நிலையங்களில் உள்ள கடைகளில் சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன.

இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 178 டவுன் பஸ்களும், 65 புறநகர் பஸ்களும் என மொத்தம் 243 பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன. இதற்காக பஸ்கள் அனைத்தும் காலையிலேயே பஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பயணிகளுக்கு காய்ச்சல் உள்ளதா?, சளி உள்ளிட்ட உடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உள்ளதா? என பரிசோதிக்கப்பட்டன. டிரைவர்கள், கண்டக்டர்கள் முககவசம் அணிந்தும், கையுறை அணிந்தும் பணியில் ஈடுபட்டனர். ஓசூர் பகுதியில் வழக்கமாக இயங்கும் 142 பஸ்களில் 60 பஸ்கள் மட்டுமே நேற்று இயங்கின.

பயணிகள் அனைவரும் முக கவசம் அணிந்து பயணம் செய்தனர். இதேபோல், பாகலூர், சூளகிரி, பேரிகை உள்ளிட்ட பகுதிகளுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 60 சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்பட்டன.

கிருஷ்ணகிரியில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டதை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கிருஷ்ணகிரி நீதிமன்ற வளாகத்திற்கு வந்தவர்களை கொரோனா தடுப்பு குழுவினர் பரிசோதனை செய்து வரும் பணிகளை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுசித்ரா, மேற்பார்வையாளர்கள் நடராஜன், பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர்கள் வினோத்குமார், ராஜா, மூர்த்தி, கலைவேந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் கலெக்டர் பிரபாகர் கூறுகையில், கிருஷ்ணகிரி நீதிமன்ற வளாகத்திற்கு வருபவர்களை 6 பேர் கொண்ட குழுவினர் வருகிற 30-ந் தேதி வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை 2 குழுவாக பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இந்த குழுவினர் வளாகத்திற்குள் வரும் வக்கீல்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதனை மேற்கொண்டு சளி, காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளிட்ட பரிசோதனையினை மேற்கொள்வார்கள். முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சானிடைசர் மற்றும் முக கவசங்கள் வழங்கி வருகின்றனர் என்று கூறினார்.


Next Story