திருச்சியில் இருந்து புறப்பட்ட இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லைக்கு வந்தது இ-பாஸ் பெற்று ஏராளமானோர் பயணம்


திருச்சியில் இருந்து புறப்பட்ட இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நெல்லைக்கு வந்தது இ-பாஸ் பெற்று ஏராளமானோர் பயணம்
x
தினத்தந்தி 2 Jun 2020 8:01 AM IST (Updated: 2 Jun 2020 8:01 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் இருந்து புறப்பட்ட இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று நெல்லைக்கு வந்தது. இதில் இ-பாஸ் பெற்று பயணித்த ஏராளமான பயணிகள் வந்தனர்.

நெல்லை, 

திருச்சியில் இருந்து புறப்பட்ட இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று நெல்லைக்கு வந்தது. இதில் இ-பாஸ் பெற்று பயணித்த ஏராளமான பயணிகள் வந்தனர்.

ரெயில் இயக்கம்

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையொட்டி பயணிகளுக்கான ரெயில், பஸ் போக்குவரத்து அடியோடு முடங்கியது. இந்த நிலையில் நேற்று முதல் பஸ், ரெயில்கள் இயக்கப்பட்டன. தமிழகத்தில் நேற்று 4 வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டன. இதில் திருச்சியில் இருந்து நெல்லை வழியாக நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலும் ஒன்றாகும்.

இந்த ரெயில் நேற்று காலை 6 மணிக்கு திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அந்த ரெயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். திருச்சி மண்டலத்தை விட்டு வெளியே செல்லக்கூடியவர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர் மூலம் பெற்ற இ-பாஸ் வைத்திருந்தனர்.

திருச்சியில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல், மதுரை வழியாக பகல் 11.10 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை ரெயில் வந்தடைந்தது. இதையொட்டி நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகள் 3 மீட்டர் இடைவெளியுடன் வரிசையாக ரெயில் நிலையத்தை விட்டு வெளியேறினார்கள். தங்களது ஊர்களுக்கு சிலர் ஆட்டோ மூலமும், சிலர் அங்கிருந்து புதிய பஸ்நிலையத்திற்கு இயக்கப்படும் அரசு பஸ்களிலும் ஏறி பயணம் செய்தனர். பின்னர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றது.

பயனுள்ளதாக உள்ளது

திருச்சியில் இருந்து பாளையங்கோட்டைக்கு வந்த பயணி குமார் கூறுகையில், “எங்கள் சொந்த ஊர் பாளையங்கோட்டை. நாங்கள் திருச்சியில் தங்கி இருந்து வேலை பார்த்து வந்தோம். இ-பாஸ் பெற்று காரில் வருவதற்கு ரூ.5 ஆயிரம் கேட்டனர். இதனால் ஊருக்கு வராமல் அங்கேயே இருந்தோம். தற்போது ரெயில் இயக்கப்பட்டதால் ரெயிலில் முன்பதிவு செய்து இ-பாஸ் பெற்று வந்து உள்ளோம். ரெயில் சேவை தொடங்கியது ஏழை-எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது“ என்றார்.

திருச்சியில் இருந்து 288 பேர் நெல்லைக்கு புறப்பட்டு வந்தனர். இதேபோல் மாலை 4.30 மணிக்கு நெல்லையில் இருந்து 351 பேருடன் திருச்சிக்கு ரெயில் புறப்பட்டுச் சென்றது.

Next Story