நாமக்கல்லில் நாட்டு மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் கடந்த மார்ச் மாதம் வரை நாட்டு மாட்டு சினை ஊசி வழங்கப்பட்டு வந்தது.
மோகனூர்,
ஏப்ரல் மாதம் முதல் தேதியில் இருந்து நாட்டு மாட்டு சினை ஊசி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வழங்க வேண்டும் எனவும், நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில் உள்ள நாட்டு மாட்டு காளைகளை, வேறு பகுதிக்கு மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமையில் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் கண்ணன், பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சதாசிவம், ஜல்லிக்கட்டு பேரவை ஹரிஸ் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.
விவசாயிகள் நாட்டு மாடுகளுடன் கலந்து கொண்டனர். இதனிடையே ஊரடங்கு காலத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக பெருமாள் உள்பட 26 பேர் மீது மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story