திருச்சியில் 2 மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டு இருந்த ஜவுளி, நகைக் கடைகள் திறப்பு
திருச்சியில் ஊரடங்கு உத்தரவினால் 2 மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டு இருந்த ஜவுளி, நகைக் கடைகள் திறக்கப்பட்டன.
திருச்சி,
திருச்சியில் ஊரடங்கு உத்தரவினால் 2 மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டு இருந்த ஜவுளி, நகைக் கடைகள் திறக்கப்பட்டன.
மூடப்பட்ட ஜவுளி கடைகள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக திருச்சி என்.எஸ்.பி. சாலை, பெரிய கடைவீதி, மேலரண் சாலை, சின்ன கடைவீதி, சத்திரம் பஸ் நிலையம் பகுதிகளில் உள்ள பிரபல ஜவுளி, நகைக் கடைகள் மூடப்பட்டன.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் நேற்று முன்தினம் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. சென்னை உள்பட 4 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் பெரிய அளவிலான ஜவுளி, நகைக் கடைகளை திறக்க அனுமதி வழங்கியது.
திறக்கப்பட்டன
இதனைத் தொடர்ந்து திருச்சி என்.எஸ்.பி. சாலையில் உள்ள பிரபல ஜவுளி கடைகள், நகைக்கடைகள் 60 நாட்களுக்கு பின்னர் நேற்று திறக்கப்பட்டன. அந்த கடைகளில் வாடிக்கையாளர்கள் கை கழுவுவதற்கு கிருமி நாசினி திரவத்தை ஊழியர்கள் கொடுத்தனர். முக கவசம் அணியாமல் வந்த வாடிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். அரசு உத்தரவின்படி குளிர்சாதன கருவிகள் நிறுத்தப்பட்டு மின்விசிறிகள் மட்டுமே சுழல விடப்பட்டு இருந்தன.
இதேபோல, மெயின்கார்டு கேட் பகுதியில் உள்ள நகைக் கடைகள், ஜவுளி கடைகளும் நேற்று திறக்கப்பட்டன. பிரபல கடைகள் திறக்கப்பட்டதாலும், பஸ்கள் இயங்க தொடங்கியதாலும் நேற்று கடைவீதியில் அதிக அளவில் மக்கள் கூட்டத்தை காண முடிந்தது.
Related Tags :
Next Story