நாமக்கல் மாவட்டத்தில் 68 நாட்களுக்கு பிறகு பஸ்கள் ஓடின


நாமக்கல் மாவட்டத்தில் 68 நாட்களுக்கு பிறகு பஸ்கள் ஓடின
x
தினத்தந்தி 2 Jun 2020 8:41 AM IST (Updated: 2 Jun 2020 8:41 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 68 நாட்களுக்கு பிறகு அரசு பஸ்கள் ஓடின. இருப்பினும் பயணிகளின் கூட்டம் குறைவாகவே இருந்தது.

நாமக்கல்,

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. இதையொட்டி தமிழகத்தில் பஸ், ரெயில் மற்றும் விமான சேவை முற்றிலும் முடங்கி உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டாலும், பஸ்களை மண்டலங்களுக்கு இடையே இயக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.

இதற்காக தமிழகம் முழுவதும் 8 மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இதன்படி முதல் மண்டலத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்கள் இடம் பெற்று உள்ளன. இந்த மாவட்டங்களுக்குள் 68 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 60 சதவீத இருக்கைகள் மட்டுமே பயணிகள் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு உள்பட 4 பணிமனைகளில் இருந்து மொத்தம் 120 பஸ்கள் இயக்கப்பட்டன. டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு கையுறை மற்றும் முக கவசம் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கும் சானிடைசர் வழங்கப்பட்டது. பின்புற படிக்கட்டு வழியாக ஏறி, முன்புற படிக்கட்டு வழியாக இறங்க அறிவுறுத்தப் பட்டது. 3 பேர் அமரும் இருக்கையில் 2 பேர் மட்டுமே அமரஅனுமதிக்கப்பட்டனர்.

இருப்பினும் பஸ்களில் பயணிகளின் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. மண்டலங்களுக்கு உள்ளே மட்டுமே பயணிக்க முடியும் என்பதால் கூட்டம் குறைவாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். காலை 6 மணிக்கு தொடங்கிய பஸ் போக்குவரத்து இரவு 9 மணிக்கு முடிந்தது.

பஸ்கள் இயக்கப்பட்டதால் கடைகளில் சற்று கூட்டம் அதிகமாக இருந்தது. வாகன போக்குவரத்தும் அதிக அளவில் இருந்தது. நாமக்கல் நகரை பொறுத்த வரையில் இயல்புநிலை திரும்பி விட்டது என்று சொல்லும் அளவுக்கு அனைத்து செயல்பாடுகளும் காணப்பட்டன. இதனால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தனியார் பஸ்கள் எதுவும் நேற்று இயக்கப்படவில்லை.

நாமக்கல் பஸ்நிலையத்தில் பஸ் போக்குவரத்துக்கு அதிகாரிகள் செய்துள்ள ஏற்பாடுகளை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பஸ்சில் பயணம் செய்ய வரும் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தினார். கொரோனாவை தடுக்க விழிப்புடன் இருக்க வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.

முக கவசம் அணியாமல் வந்த நபர் ஒருவருக்கு முக கவசம் வழங்கிய அவர், முதியவர்கள் மற்றும் கிராமபுறத்தை சேர்ந்தவர்கள் முக கவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு முக கவசம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது அவர் பஸ்களில் கிருமிநாசினி தெளிக்கும் பணியையும் பார்வையிட்டார்.

முன்னதாக 68 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டதையொட்டி நாமக்கல் பஸ்நிலையத்தை சுத்தம் செய்த நகராட்சி அதிகாரிகள் பஸ் போக்குவரத்துக்கு நேற்று திறந்து விட்டனர். மேலும் ஒவ்வொரு பஸ்சும் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட்டு மீண்டும் பஸ்நிலையத்திற்கு வரும் போது கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி நகராட்சி தூய்மை பணியாளர்கள் பஸ்களின் டயர்கள், படிக்கட்டுகள் உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளித்தனர். இப்பணியை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அசோக்குமார், செயற்பொறியாளர் கமலநாதன், நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர்பாஷா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது அவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு பஸ்நிலைய கடைகள் திறக்கப்பட்டு இருப்பதால், அவற்றில் விற்பனை செய்யப்படும் பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உதவியுடன் சோதிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் வார்டு வாரியாக கண்காணிப்பு குழு அமைத்து புதிதாக நகராட்சி பகுதிக்கு வரும் நபர்களை கண்காணிக்க வேண்டும் எனவும் கூறினர்.

ஊரடங்கு தளர்வு காரணமாக ராசிபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து 30 டவுன் பஸ்களும், 26 புறநகர் பஸ்களும் இயக்கப்பட்டன. பஸ்சில் முக கவசம் அணிந்து வந்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டது. 2 மாதங்களுக்கு பிறகு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

திருச்செங்கோடு நகராட்சி புதிய பஸ் நிலையத்தில் இருந்தும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. கடந்த 50 நாட்களாக புதிய பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தினசரி காய்கறி மார்க்கெட் பழைய இடத்திற்கு மீண்டும் மாற்றப்பட்டது. புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் இயக்க வசதியாக திருச்செங்கோடு நகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது இந்த பணிகளை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அசோக் குமார், மண்டல பொறியாளர் கமலநாதன், ஆணையாளர் சையத் முஸ்தபா கமால், துப்புரவு அலுவலர் ஜான்ராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.

Next Story