விருதுநகரில் சுகாதார ஆய்வாளர் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 150 ஆக உயர்வு
விருதுநகரில் சுகாதார ஆய்வாளர் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ள நிலையில் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 150 ஆகஉயர்ந்துள்ளது.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் 9,640 பேருக்கு நேற்று முன்தினம் வரை மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் 360 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 58 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இதுதவிர வெளிமாநிலத்தில் இருந்து திரும்பிய 263 பேர் 6 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சுகாதார ஆய்வாளர்
இந்தநிலையில் நேற்று விருதுநகர் அல்லம்பட்டியில் வசிக்கும் 56 வயது சுகாதார ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இவர் சுய மருத்துவ பரிசோதனை செய்ததில் இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கல்லூரி மாணவி
விருதுநகர் சின்னபேராலி கிராமத்தில் 2 தினங்களுக்கு முன்னர் கூட்டுறவு சங்க மேலாளர் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சின்னபேராலி கிராமத்திலும், பெரிய பேராலி கிராமத்திலும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சின்ன பேராலி கிராமத்தில் உள்ள 3-வது ஆண்டு பட்டப்படிப்பு படிக்கும் 20 வயது கல்லூரி மாணவிக்கும், பெரிய பேராலியை சேர்ந்த 41 வயது தனியார் டிரைவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உயர்வு
இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. நீண்டநாட்களுக்கு பின்னர் விருதுநகர் மாவட்டத்தில் வசிப்போருக்கு நோய் தொற்று உறுதியாகி உள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் உடனடியாக கண்காணிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்படாமல் கிராமங்களிலேயே தங்க அனுமதிக்கப்பட்டதால் நோய் சமூக பரவல் ஏற்படும் என எச்சரிக்கப்பட்ட நிலையில் சின்னபேராலி கிராமத்தில் சென்னையில் இருந்து திரும்பிய தம்பதியரால் கல்லூரி மாணவிக்கும், டிரைவருக்கும் நோய் தொற்று உறுதியாகி உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் இதனை எச்சரிக்கையாக கருதி கிராமப்பகுதியில் பரவலாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story