ராமேசுவரம் கோவில் சேமநலநிதி மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் மேலும் பலருக்கு தொடர்புள்ளதாக விசாரணையில் தகவல்
ராமேசுவரம் கோவில் சேமநலநிதி மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டு வழக்கு விசாரணை தொடங்கி உள்ளது. இந்த மோசடியில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் கோவிலில் பணியாற்றும் தொழிலாளர் சேமநலநிதிக்கான பணத்தில் இருந்து ரூ.74 லட்சத்து 24 ஆயிரத்து 568 கையாடல் செய்யப்பட்டுள்ளது தணிக்கையின்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திருக்கோவில் தற்காலிக கணினி பணியாளர் சிவனருள் குமரன் மற்றும் கணக்காளர் ரவீந்திரன் ஆகியோர் மீது கோவில் இணை ஆணையர் கல்யாணி கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாவட்ட போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவீந்திரனை கைது செய்தனர். சிவனருள் குமரன் சரணடைந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் மோசடியின் முக்கியத்துவம் கருதி இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து இந்த மோசடி வழக்கு ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு நேற்று இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் வழக்குப்பதிவு செய்துள்ளார். சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த மோசடி தொடர்பாக உடனடியாக முதல்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர்.
பரபரப்பு
இதில் இவர்கள் இருவர் தவிர மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதாகவும், அவர்கள் குறித்த விவரங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ராமேசுவரம் கோவில் சேமநலநிதி மோசடி வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையில் மேலும் பலர் சிக்குவார்கள் என்றும், பலர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் கோவில் பணியாளர்கள் மற்றும் மோசடியில் தொடர்புடையவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story