பல்லடம் அருகே குடியிருப்பு பகுதிகளில் படையெடுக்கும் ஈக்கள் பொதுமக்கள் அவதி


பல்லடம் அருகே  குடியிருப்பு பகுதிகளில் படையெடுக்கும் ஈக்கள்  பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 2 Jun 2020 5:12 AM GMT (Updated: 2020-06-02T10:42:10+05:30)

பல்லடம் அருகே குடியிருப்பு பகுதிகளுக்குள் படையெடுக்கும் ஈக்களால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொழில் நகரமாக விளங்குகிறது. இங்கு விசைத்தறி, கோழிப்பண்ணை மட்டுமல்லாது விவசாயமும் முக்கிய தொழிலாக உள்ளது. பல்லடம் அருகே காளிவேலம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி ஊஞ்சம்பாளையம். இங்கு 500-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மேலும், இப்பகுதியில் சில கோழிப்பண்ணைகளும் உள்ளன.

இந்நிலையில் இந்த கோழிப்பண்ணைகள் சரிவர பராமரிக்கப்படாமல் இயங்குவதால் அங்கு உற்பத்தியாகும் ஈக்கள் குடியிருப்பு பகுதியை நோக்கி படையெடுக்கின்றன.இந்த ஈக்கள் அங்குள்ள வீடுகளில் உணவுப் பொருட்கள் மற்றும் விவசாய தானியங்களில் மொய்க்கின்றன. மேலும் கால்நடைகள் மீதும் அமர்ந்தும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் அதிக அளவில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பிரியங்கா கூறும்போது:-

தொற்று நோய் பரவும் அபாயம்

எங்கள் குடும்பம் விவசாயக்குடும்பம் ஆகும். மாடுகள் வைத்து பால் கறந்து விற்பனையும் செய்து வருகிறோம். இந்நிலையில் இந்த ஈக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வந்து கறந்து வைத்துள்ள பசும் பாலில் விழுந்து உயிரிழக்கின்றன. மேலும் வீடுகளில் உள்ள உணவுப் பதார்த்தங்களிலும் ஈக்கள் மொய்வதால் எங்களுக்கு தொற்றுநோய் பரவும் என்ற அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கைக்குழந்தைகள், வயதானவர்கள் என ஏராளமானோர் வசித்துவரும் எங்கள் பகுதியை இந்த ஈக்களிடமிருந்து பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வெங்கடேசன் என்பவர் கூறும்போது, எங்கள் பகுதியில் உள்ள கோழிப்பண்ணை கழிவுகளிலிருந்து ஈக்கள் உற்பத்தியாகி குடியிருப்புகளுக்குள் புகுந்து தொற்று நோயை ஏற்படுத்துகின்றன. எனவே அதிகாரிகள் கோழிப்பண்ணைகளில் ஆய்வு செய்து, முறைப்படி மருந்து தெளித்து ஈக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈக்கள் தொல்லைகள் இப்பகுதி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள் என்றார்.

Next Story