மாவட்டத்தில் அரசு பஸ்கள் ஓடத்தொடங்கின பயணிகள் வருகை குறைவு


மாவட்டத்தில் அரசு பஸ்கள் ஓடத்தொடங்கின பயணிகள் வருகை குறைவு
x
தினத்தந்தி 2 Jun 2020 5:33 AM GMT (Updated: 2020-06-02T11:03:13+05:30)

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பஸ்கள் ஓடத்தொடங்கின. பயணிகள் வருகை குறைவாக இருந்தது.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பஸ்கள் ஓடத்தொடங்கின. பயணிகள் வருகை குறைவாக இருந்தது.

பஸ்கள் ஓடத்தொடங்கின

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் அமலில் உள்ள ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பஸ் போக்குவரத்து நேற்று முதல் தொடங்கியது. இதில் 50 சதவீத பஸ்கள், 60 சதவீத பயணிகளுடன் இயக்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் உள்ள நகர மற்றும் புறநகர் பஸ்கள் மொத்தம் 383-ல் 50 சதவீதம் என 192 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 68 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் அரசு பஸ்கள் ஓடத்தொடங்கின.

புதுக்கோட்டை பஸ் நிலையம் அருகே உள்ள பணிமனையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின் அதிகாலை 5.30 மணிக்கு பிறகு பஸ்கள், பஸ் நிலையத்திற்கு வந்தன. முன்னதாக பணிமனையில் டிரைவர், கண்டக்டர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்டது. மேலும் கைகளை கிருமி நாசினி மூலம் கழுவினர். பஸ்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடித்து அமரும் வகையில் இருக்கையில் குறியீடுகள் வரையப்பட்டிருந்தன. 3 பேர் அமரக்கூடிய இருக்கையில் நடுப்பகுதி இருக்கை இடைவெளியாக விடப்பட்டிருந்தது. 2 பேர் அமரக்கூடிய இருக்கையில் ஒருவர் மட்டும் அமர்ந்திருந்தனர். மேலும் பயணிகள் முக கவசம் அணிந்து பயணம் செய்தனர்.

விதிமுறைகளை கடைப்பிடிக்க...

மண்டலம் வாரியாக பிரிக்கப்பட்டதில் புதுக்கோட்டை மாவட்டத்திற்குள்ளும், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகிறது. பயணிகளிடம் பழைய டிக்கெட் கட்டண முறையே வசூலிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று பஸ்களில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. ஒரு சில பஸ்களில் இருக்கைகள் காலியாக கிடந்தன. தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.

இதற்கிடையே புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதை கலெக்டர் உமாமகேஸ்வரி நேற்று காலை ஆய்வு செய்தார். அப்போது அரசு அறிவித்துள்ள நடைமுறைகளை பின்பற்றி பஸ்களை இயக்கவும், பயணிகள் அதனை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தினார். அப்போது அரசு போக்குவரத்து கழக புதுக்கோட்டை பொது மேலாளர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். பஸ் நிலையத்திலும் போக்குவரத்து கழக அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் விதிமுறைகளை அறிவித்து கொண்டே இருந்தனர். பஸ்கள் ஓடத்தொடங்கியதால் புதிய பஸ் நிலையத்தில் இருந்த தற்காலிக சந்தை கடைகள், ஏற்கனவே செயல்பட்ட மார்க்கெட்டுகளில் நேற்று முதல் இயங்க தொடங்கின.

கடைவீதியில் கூட்டம்

ஊரடங்கு தளர்வின் காரணமாக புதுக்கோட்டையில் ஏற்கனவே பெரும்பாலான கடைகள் திறந்து செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பெரிய ஜவுளி மற்றும் நகைக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அந்த கடைகளும் நேற்று திறக்கப்பட்டன. கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. புதுக்கோட்டை வழியாக சிறப்பு ரெயில்கள் எதுவும் இயக்கப்படாததால் ரெயில் நிலையம் வெறிச்சோடி உள்ளது.

ஆலங்குடி, பொன்னமராவதி, அறந்தாங்கி, அன்னவாசல்

ஆலங்குடி வழியாக இயக்கப்பட்ட பெரும்பாலான பஸ்களில் ஒரு சில பயணிகளே இருந்தனர். பள்ளி, கல்லூரிகள், முழுமையாக அலுவலகங்கள் இயங்காததாலும், மண்டலம் விட்டு மண்டலம் செல்ல இ-பாஸ் தேவை என்பதாலும் பஸ்களில் பயணிகள் கூட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. பொன்னமராவதி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 23 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொன்னமராவதியில் இருந்து ஆலவயல், பாலக்குறிச்சி மற்றும் வாராப்பூர், பாலக்குறிச்சி வழியாக திருச்சிக்கும், துவரங்குறிச்சி வழியாக திருச்சிக்கும், பொன்னமராவதியில் இருந்து புதுக்கோட்டை, தஞ்சாவூருக்கும் தொலைதூர பஸ்கள் இயக்கப்படுகின்றன. சடையம்பட்டி, பாலக்குறிச்சி, துவரங்குறிச்சி, திருமயம் உள்ளிட்ட ஊர்களுக்கு நகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருப்பத்தூர் வேறு மண்டலத்தில் வருவதால் திருப்பத்தூருக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை.

அறந்தாங்கி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 30 பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பஸ் இயக்கப்படுகிறது. டிரைவர்கள், கண்டக்டர்கள் கையுறை, முக கவசம் அணிந்திருந்தனர். குறைந்த அளவிலேயே பயணிகள் பயணம் செய்தனர். நீண்ட நாட்களுக்கு பின்னர் பஸ்கள் இயக்கப்பட்டதால், பஸ் நிலையத்தில் கடை வைத்திருக்கும் ஒருவர் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் பயணிகளுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்றார். அன்னவாசலை அடுத்த இலுப்பூரில் இருந்து திருச்சி, திருப்பத்தூர், புதுக்கோட்டை, கீரனூர், மணப்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ் இயக்கப்பட்டது. அன்னவாசல் பகுதிகளில் உள்ள கிராம பகுதிகளில் கொரோனா அச்சத்தால் பஸ்களில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டது.

Next Story