ஊரடங்கிற்கு பிறகு நீதிமன்றங்கள், கடைகள் திறப்பு
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
பெரம்பலூர்,
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றங்கள் மற்றும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றங்கள் திறப்பு
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் 4 கட்டங்களாக ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்கள் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்கு நடத்துபவர்கள், பொதுமக்கள் அனைவரும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்பட்டு, கைகள் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். இதில் வழக்கு விசாரணைகள், சாட்சிகள் விசாரணை நடைபெறவில்லை.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டிய புதிய மனுக்களை ஏற்பதற்காக நீதிமன்ற வளாகத்தில் சிவில் வழக்குகளுக்காக ஒரு பெட்டியும், குற்றவியல் வழக்குகளுக்காக ஒரு பெட்டியும் வைக்கப்பட்டிருந்தன. 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் தங்களது மனுக்களை தாக்கல் செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.
முன்ஜாமீன் கோரும் மனுக்கள்
3 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்டு ஏப்ரல் மாதம் வரை காலக்கெடு விதிக்கப்பட்டு, காலாவதியான வழக்குகளை ஜூன் 14-ந் தேதி வரை நீடிப்பு செய்து ஏற்கனவே உச்சநீதிமன்றம் உத்திரவிட்டிருந்தது. ஜாமீன் கோரும் மனுக்கள் ஆன்லைன் முறையில் தாக்கல் செய்யப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் நேற்று ஜாமீன், முன்ஜாமீன் கோரும் மனுக்கள் ஏற்கப்பட்டன. இதனிடையே பெரம்பலூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக பெரும்பாலான கடைகள் கடந்த மே மாதம் 11-ந் தேதி முதலே திறந்து வைக்கப்பட்டுள்ளன. ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் இரவு 7 மணி வரை திறந்து வைக்கப்பட்டிருந்தன. மருந்துக்கடைகள், பால்பொருட்கள் விற்பனை கடைகள் எந்த நேரமும் இயங்கும் வகையில் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இயல்பு வாழ்க்கை
இந்த நிலையில் 4-வது கட்ட ஊரடங்கு முடிவடைந்து நேற்று அனைத்து கடைகளும், வழக்கம்போல திறக்கப்பட்டு காலை முதல் இரவு வரை வழக்கம்போல இயங்கின. ஓட்டல்கள், உணவுவிடுதிகளில் பார்சல் உணவுகள் மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் சில ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று ஓட்டல்கள், உணவு விடுதிகளில் உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டனர்.
பத்திரப்பதிவு அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் மக்கள் அதிக அளவில் இருந்தனர். மகளிர் போலீஸ் நிலையத்தில் அதிக எண்ணிக்கையில் மக்கள் நெருக்கடிகாணப்பட்டது. இவ்வாறாக மக்களின் இயல்பு வாழ்க்கை மீண்டும் தொடங்கியது.
Related Tags :
Next Story