திருப்பூர் மாவட்டத்தில் 68 நாட்களுக்கு பிறகு இயக்கப்பட்ட அரசு பஸ்கள் குறைந்த எண்ணிக்கையில் பயணிகள் பயணம்
திருப்பூர் மாவட்டத்தில் 68 நாட்களுக்கு பிறகு அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. அந்த பஸ்களில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பயணிகள் பயணம் செய்தனர்.
திருப்பூர்,
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதனால் 68 நாட்களுக்கு பிறகு நேற்று அரசு போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்பட்டன. கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கருர், சேலம், நாமக்கல் ஆகிய 7 மாவட்டங்கள் ஒரு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களுக்குள் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த மண்டலத்திற்குள் பயணம் செய்யும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் அரசு அறிவித்தது.
திருப்பூர் மண்டலத்தில் திருப்பூரில் 2, காங்கேயம், தாராபுரம், உடுமலை, பல்லடம் ஆகிய ஊர்களில் தலா 1, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 2 என மொத்தம் 8 பணிமனைகள் உள்ளன. இதில் திண்டுக்கல் மாவட்டம் அரசின் அறிவிப்புப்படி வேறு மண்டலத்துக்குள் வருவதால் அந்த பணிமனைகளில் இருந்து திருப்பூருக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. 50 சதவீத பஸ்கள் இயக்கவும், ஒரு பஸ்சில் 60 சதவீதம் பயணிகள் பயணம் செய்யும் அறிவிக்கப்பட்டது. இதனால் மண்டலத்தில் இருந்து 180 பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.
பழைய பஸ் நிலையம்
திருப்பூர் 1-வது பணிமனையில் இருந்து 41 பஸ்கள் இயக்கப்பட்டன. இவற்றில் 21 டவுன் பஸ்கள் ஆகும். அதுபோல் 2-வது பணிமனையில் இருந்து 22 பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் 14 டவுன் பஸ்கள் ஆகும். மீதம் உள்ளவை கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி மாவட்டத்துக்கு இயக்கப்பட்டன. திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாமக்கல், கரூர், கோவைக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் கட்டுமான பணிகள் நடப்பதால் அங்கிருந்து கோவை, உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ் நிலையத்தின் முன்புறம் தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு பகுதிகளில் இருந்தும் சேலம், ஈரோடு, நீலகிரி பஸ்கள் மற்றும் டவுன்பஸ்கள் இயக்கப்பட்டன.
கிருமிநாசினி
காலை 5 மணி முதல் பஸ்கள் இயக்கம் தொடங்கின. இதற்காக அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்கள் வீடுகளில் இருந்து இருசக்கர வாகனத்தில் பணிமனைக்கு முன்கூட்டியே வந்தனர். மேலும் சில டிரைவர், கண்டக்டர்கள் கார்களை வாடகைக்கு அமர்த்தி பணிக்கு வந்தார்கள்.
பணிமனையில் பஸ்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன. டிரைவர், கண்டக்டர்களுக்கு உடல் வெப்ப நிலையை கருவி மூலம் அறியப்பட்டது. அதன்பிறகு முககவசம், கிருமிநாசினி வழங்கப்பட்டது. பஸ் நிலையத்துக்கு வந்ததும் பஸ்சின் பின் வாசல் வழியாக பயணிகள் வரிசையாக சமூகஇடைவெளி விட்டு ஏற்றப்பட்டனர். பஸ்சுக்குள் ஏறுவதற்கு முன்பு கண்டக்டர், பயணிகளின் உடல் வெப்பநிலையை கருவி மூலம் அறிந்து, கிருமிநாசினியை பயணிகளுக்கு வழங்கி கைகளை சுத்தம் செய்த பிறகே அனுமதித்தார். முககவசம் அணிந்த பயணிகள் மட்டுமே பஸ்சுக்குள் ஏற அனுமதிக்கப்பட்டனர். 3 பேர் கொண்ட இருக்கையில் 2 பேரும், 2 பேர் இருக்கையில் ஒருவரும், 6 பேர் இருக்கையில் 3 பேரும் அமர அனுமதிக்கப்பட்டனர். ஒரு பஸ்சில் அதிகபட்சமாக 30 பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
கூட்டம் குறைவு
சமூக இடைவெளி, கிருமிநாசினி பயன்படுத்துதல், முககவசம் அணிதல் ஆகியவற்றை அரசு பணிமனையை சேர்ந்த அதிகாரிகள் பஸ் நிலையங்களுக்கு வந்து கண்காணித்தனர். காலை 10 மணி வரை பஸ்களில் கூட்டம் மிகவும் குறைவாகவே இருந்தது. அதன்பிறகு டவுன் பஸ்கள் ஒவ்வொரு பகுதிக்கும் ஓட தொடங்கியதும் பயணிகள் பஸ் நிலையங்களுக்கு வந்தனர். பயணிகளின் தேவையை பொறுத்து பஸ்கள் ஒவ்வொரு பகுதிக்கும் இயக்கப்பட்டன.
எந்தெந்த பஸ்கள் எங்கிருந்து இயக்கப்படுகிறது என்ற தகவல் பொதுமக்களுக்கு சரிவர தெரியவில்லை. பழைய பஸ் நிலையத்தில் பணிகள் நடப்பதால் தற்காலிகமாக பஸ்களை பஸ் நிலையத்தின் ஒரு பகுதியிலும், பஸ் நிலையத்துக்கு முன்புறம் உள்ள ரோட்டில் இருந்தும் அங்கிருந்து இயக்கி வருகிறார்கள். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கலெக்டர் ஆய்வு
இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று மதியம் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் அரசு பஸ்கள் இயக்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். பயணிகள் அனைவரும் முககவசம் அணிந்து வர அறிவுறுத்தினார். ஒரு பெற்றோர் தனது 2 குழந்தைகளுக்கு முககவசம் அணியாமல் வந்திருந்ததை கண்ட கலெக்டர் குழந்தைகளுக்கு முககவசம் கொடுத்து அணிய அறிவுறுத்தினார். இதுபோன்ற காலங்களில் குழந்தைகளுடன் பயணிப்பதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
சமூக இடைவெளியுடன் பயணிகள் பஸ்சுக்குள் இருப்பதை ஆய்வு செய்தார். பயணிகளுக்கும் கொரோனா பரவல் குறித்து அறிவுரை வழங்கினார். அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பஸ்களின் இயக்கம் தொடர்பாக விவரங்களை கேட்டறிந்தார்.
180 பஸ்கள்
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது-
திருப்பூர் மாவட்டத்தில் 197 பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டது. 180 பஸ்கள் இயக்கத்தில் உள்ளது. பயணிகள் பஸ்சில் ஏறும் முன்பு உடல்வெப்பநிலையை அறியும் கருவி கொண்டு பரிசோதனைசெய்து, கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்த பின்பு பஸ்சில் ஏற அனுமதிக்கப்படுகிறார்கள். அனைவரும் முககவசம் அணிவது கட்டாயம். இன்று(அதாவது நேற்று) 30 சதவீதம் பயணிகள் வருகை உள்ளது. பயணிகளின் வருகையை பொறுத்து பஸ்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். வணிக வளாகங்களை தவிர மற்ற கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. பஸ் நிலைய பகுதியில் குடிநீர், உணவுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளையும் திறக்க ஏற்பாடு செய்யப்படும்.
Related Tags :
Next Story