ஈரோட்டில் அனைத்து வகையான ஜவுளிக்கடைகளும் திறக்கப்பட்டன


ஈரோட்டில் அனைத்து வகையான ஜவுளிக்கடைகளும் திறக்கப்பட்டன
x
தினத்தந்தி 2 Jun 2020 11:31 AM IST (Updated: 2 Jun 2020 11:31 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாநகர் ஜவுளி மாநகர் என்ற சிறப்பு பெயர் பெற்றது. ஈரோட்டில் ஜவுளி விற்பனைக்கு என்று பிரத்தியேகமாக சந்தைகள் கூடி வருகின்றன.

ஈரோடு,

பன்னீர் செல்வம் பூங்கா கனிமார்க்கெட், காந்திஜி ரோடு சென்ட்ரல் தியேட்டர் வளாகம் மற்றும் சுற்றுப்புறபகுதிகள், அசோகபுரம் மற்றும் கங்காபுரம் டெக்ஸ்வேலி ஜவுளி சந்தை ஆகியவை பெரிய அளவிலான சந்தைகளாக இயங்கி வருகின்றன.

இதுதவிர மொத்த வியாபாரிகளுக்கான குடோன்கள், ஏற்றுமதியாளர்கள் குடோன்கள், உற்பத்தியாளர்கள் குடோன்கள் என்று ஜவுளி விற்பனை பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறது. ஊரடங்கின்போது மிக அதிக அளவில் பாதிக்கப்பட்ட தொழிலாக ஜவுளி உற்பத்தி இருந்தது. தற்போது அந்த நிலை தொடருகிறது.

புதிதாக ஆர்டர்கள் எதுவும் இல்லாத நிலையில் உற்பத்தி செய்வதே கேள்விக்குறியில் இருப்பதாக உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே சிறிய அளவிலான ஜவுளிக்கடைகளும் திறப்பதற்கு இருந்த தடை முற்றிலும் விலக்கப்பட்டதால் நேற்று அனைத்து வகையான ஜவுளிக்கடைகளும் திறக்கப்பட்டன. ஈஸ்வரன்கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி, பிருந்தா வீதி என்று ஈரோடு நகரில் முக்கிய ஜவுளி வர்த்தகப்பகுதிகள் நேற்று முழுமையாக செயல்பட்டன.

கடைகள் திறந்து இருந்தாலும் வாடிக்கையாளர்கள் வருகை இல்லாமல் வீதிகள் வெறிச்சோடி கிடந்தன. பஸ் போக்குவரத்து தொடங்கி இருப்பதால் வெளியூர் வியாபாரிகள் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே இனிவரும் நாட்களில் சற்று வியாபாரம் அதிகரிக்கும் என்று நம்புவதாக வியாபாரிகள் சிலர் கூறினார்கள்.

Next Story