68 நாட்களுக்கு பிறகு பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் 50 சதவீத பஸ்கள் இயக்கம் குறைவான பயணிகளே பயணித்தனர்


68 நாட்களுக்கு பிறகு பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் 50 சதவீத பஸ்கள் இயக்கம் குறைவான பயணிகளே பயணித்தனர்
x
தினத்தந்தி 2 Jun 2020 11:39 AM IST (Updated: 2 Jun 2020 11:39 AM IST)
t-max-icont-min-icon

68 நாட்களுக்கு பிறகு பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டாலும், பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.

பெரம்பலூர், 

68 நாட்களுக்கு பிறகு பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டாலும், பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.

பஸ்கள்

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து நாடு முழுவதும் 5-வது கட்டமாக ஊரடங்கு உத்தரவு தளர்வுகளுடன் மத்திய அரசு வருகிற 30-ந் தேதி வரை நீட்டித்துள்ளது. அதன்படி தமிழகத்திலும் வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் தமிழக அரசு ஏற்கனவே பல்வேறு தளர்வுகளை அறிவித்து உள்ளது. 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பொது போக்குவரத்துக்கு மட்டும் அனுமதிக்கப்படாத சூழ்நிலையில் இந்த ஊரடங்கு நீட்டிப்பில், தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளான சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர, பிற மாவட்டங்களில் பொது போக்குவரத்து தொடங்கலாம் என்றும், 50 சதவீத பஸ்களை, 60 சதவீத பயணிகளுடன் ஜூன் 1-ந் தேதி முதல் இயக்க அரசு உத்தரவிட்டது.

அதன்படி பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் 68 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் பஸ்கள் இயங்க தொடங்கின. பெரம்பலூர் மாவட்டத்திற்குள் 18 டவுன் பஸ்களும், பெரம்பலூரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு 29 பஸ்களும் என மொத்தம் 47 பஸ்களும், அரியலூர் மாவட்டம் அரியலூரில் இருந்து 45 பஸ்களும், ஜெயங்கொண்டத்தில் இருந்து 12 டவுன் பஸ்களும், 33 புறநகர் பஸ்களும் என 45 பஸ்களும் நேற்று அதிகாலை 5 மணி முதல் இயக்கப்பட்டன.

பயணிகளுக்கு கிருமி நாசினி

முன்னதாக அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் புறப்பட்ட பஸ்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு முககவசம், கையுறை, சோப்பு, கிருமி நாசினி, கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள் ஆகியவை வழங்கப்பட்டது. டிரைவர்கள், கண்டக்டர்கள் முககவசம், கையுறை அணிந்திருந்தனர். அடிக்கடி அவர்கள் கிருமி நாசினியை கொண்டு கைகளை சுத்தம் செய்து கொண்டனர். மேலும் பஸ் நிலையங்களிலும் பஸ்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் பஸ்சின் பின்பக்க வாசல் வழியாக தான் பயணிகளை சமூக இடைவெளி விட்டு ஏற அனுமதிக்கப்பட்டனர். முககவசம் அணிந்து வராத பயணிகள் பஸ்சில் ஏற அனுமதி மறுக்கப்பட்டனர்.

பஸ்சில் ஏறுவதற்கு முன்பு பயணிகளுக்கு கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியை கண்டக்டர் வழங்கினார். மேலும் சுகாதாரத்துறையினர் தெர்மல் ஸ்கேனர் மூலம் பயணிகளின் உடல் வெப்பநிலையை கண்காணித்தனர். மண்டலத்திற்குள் பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என்பதால் பெரம்பலூரில் இருந்து அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கும், அரியலூர், ஜெயங்கொண்டத்தில் இருந்து பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கும் இடையே மட்டும் இயக்கப்பட்டது. ஒரு மண்டலத்தில் இருந்து அடுத்த மண்டலத்தின் எல்லை வரை பஸ்கள் இயக்கப்பட்டது.

கூட்டமில்லை

ஒரு பஸ்சில் 60 சதவீத பயணிகள் மட்டும் ஏற அனுமதித்தும், மண்டலத்திற்குள் இயக்கப்பட்டதால் பயணிகள் கூட்டமின்றி தான் பஸ்கள் சென்றன. கிராமப்புறங்களுக்கு செல்லும் சில டவுன் பஸ்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே பயணிகள் இருந்தனர். சமூக இடைவெளிக்காக பஸ்களில் 3 இருக்கைகள் உள்ளதில் 2 பயணிகளும், 2 இருக்கைகள் உள்ளதில் ஒரு பயணியும் அமர்ந்து பயணம் செய்தனர். மேலும் பயணிகளிடம் பழைய கட்டணமே வசூலிக்கப்பட்டது.

மண்டலத்திற்குள் பஸ்களில் இ-பாஸ் இன்றி பயணிகள் பயணம் செய்தனர். இரவு 9 மணி வரை பஸ்கள் இயக்கப்பட்டது. பஸ்கள் இயக்கப்பட்டதால் பஸ் நிலையங்களில் கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது.

Next Story