நிலம் கொடுத்த விவசாயிகள் அரசு சிமெண்டு ஆலைக்கு சுரங்கம் தோண்ட எதிர்ப்பு போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம்
நிலம் கொடுத்த விவசாயிகள் அரசு சிமெண்டு ஆலைக்கு சுரங்கம் தோண்ட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
செந்துறை,
நிலம் கொடுத்த விவசாயிகள் அரசு சிமெண்டு ஆலைக்கு சுரங்கம் தோண்ட எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
சிமெண்டு ஆலை
அரியலூர் அரசு சிமெண்டு ஆலைக்கு செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி கிராமத்தில் கடந்த 1983-ம் ஆண்டு 161 விவசாயிகளிடம் 270 ஏக்கர் நிலத்தை ஏக்கர் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரத்து 500-க்கு அரசு கையகப்படுத்தியது. நிலத்தை கையகப்படுத்தியபோது அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பேசிய அதிகாரிகள் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு சிமெண்டு ஆலையில் வேலை வழங்கப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் கடந்த பல ஆண்டுகளாக அவர்களுக்கு வேலை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க மாவட்ட கலெக்டர் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது விவசாயிகள் நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு வேலை வழங்காமல் சுரங்கம் தோண்டினால் குடும்பத்தினருடன் தற்கொலை செய்துகொள்வோம் என்று கண்ணீர் மல்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
எதிர்ப்பு
அதனை தொடர்ந்து தொழில் துறை அமைச்சர் சம்பத் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் உடனடி வேலையும், படிப்படியாக ஆலையின் தேவைகளுக்கு ஏற்ப நிரந்தர பணியும் வழங்கப்படும் என்று உறுதி செய்யப்பட்டது. இதில் விவசாயிகள் சமரசம் அடைந்தனர். இந்நிலையில் நிலம் கொடுத்த ஆனந்தவாடி விவசாயிகளுக்கு நிரந்தர வேலை வழங்காமல் வெளிநபர்கள் 30 பேருக்கு வேலை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள அரியலூர் அரசு சிமெண்டு ஆலையில் விவசாயிகளுக்கு வேலை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் அரசு சிமெண்டு ஆலைக்கு நேற்று முதல் சுண்ணாம்புக்கல் எடுக்க நிர்வாகம் திட்டமிட்டு அப்பகுதியில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட போலீசாரை குவித்து இருந்தனர். இதனை அறிந்த கிராம விவசாயிகள் தங்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், அது வரை சுண்ணாம்புக்கல் எடுக்க விடமாட்டோம் என கிராமத்தின் மையப்பகுதியில் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஆனந்தவாடி கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
அதனை தொடர்ந்து உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பூங்கோதை, அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், பெரம்பலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருமேனி, மோகன்தாஸ், செந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன் ஆகியோர் விவசாயிகளிடம் மீண்டும், மீண்டும் 4 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகள் தங்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் அல்லது அதற்கான எழுத்து பூர்வமான உத்தரவாதம் வழங்க வேண்டும். இல்லை எனில் நிலத்தை திருப்பி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இறுதியாக சிமெண்டு ஆலையில் வேலை கேட்டு விண்ணப்பித்த 57 விவசாயிகளை சிமெண்டு ஆலைக்கு பஸ் மூலம் அழைத்துச்செல்லப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது தற்போது 57 பேருக்கும் ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்றும், பின்னர் அவர்களின் தகுதிக்கு ஏற்ப பணி நிரந்தரம் செய்யப்படும் என்றும் ஆலை நிர்வாக அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story