ஈரோடு தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை; அதிகாரிகள் சீல் வைத்தனர்


ஈரோடு தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை; அதிகாரிகள் சீல் வைத்தனர்
x
தினத்தந்தி 2 Jun 2020 12:08 PM IST (Updated: 2 Jun 2020 12:08 PM IST)
t-max-icont-min-icon

கடன் தொகையை அபராதத்துடன் வசூலித்ததாக ஈரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அந்த நிறுவனத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஈரோடு,

ஈரோடு மேட்டூர்ரோட்டில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிதி நிறுவனத்தின் மூலம் பொதுமக்கள் பலர் கடன் பெற்று, செல்போன், பிரிட்ஜ், கணினிகள் உள்பட பல்வேறு பொருட்களை வாங்கியுள்ளார்கள். மேலும், தனிநபர் கடனும் பலர் பெற்றிருக்கிறார்கள்.

இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் 6 மாதங்களுக்கு கடன் தவணை தொகையை செலுத்த வேண்டியதில்லை என்று ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் அரசின் உத்தரவையும் மீறி கடன் தவணை தொகையை செலுத்தாதவர்களுக்கு அபராதத்துடன் கூடிய கடன் தவணை வசூலித்ததாக கூறப்படுகிறது. இதனால் கடன் வாங்கியிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தநிலையில் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஈரோடு மேட்டூர் ரோட்டில் உள்ள நிதி நிறுவனத்துக்கு நேற்று காலை சென்றனர். அவர்கள் திடீரென அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் பற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதற்கு நிதி நிறுவனத்தின் மீது அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கும்படி போலீசார் அறிவுறுத்தினார்கள்.

இதற்கிடையே மாநகராட்சி அதிகாரிகள் அந்த நிதி நிறுவனத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு விதிமுறைகளை மீறி குளிர்சாதன வசதி பயன்படுத்தப்பட்டதும், கிருமி நாசினி போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தப்படாமல் இருந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து விதிமுறையை மீறி செயல்பட்டதாக கூறி நிதி நிறுவனத்தை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story