கொரோனா வைரசால் முதியவர் பலி


கொரோனா வைரசால் முதியவர் பலி
x
தினத்தந்தி 2 Jun 2020 11:15 AM GMT (Updated: 3 Jun 2020 12:19 AM GMT)

ஆதம்பாக்கத்தில் கொரோனா வைரஸ் காரணமாக முதியவர் உயரிழந்தார்.

ஆலந்தூர், 

சென்னை மாநகராட்சி ஆலந்தூர் மண்டலத்தில் நேற்று வரை 229 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் 97 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 129 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்தநிலையில் ஆதம்பாக்கம் பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த 70 வயது முதியவர், கொரோனா வைரஸ் காரணமாக அரசு பொது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது உடல் ஆலந்தூரில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

சென்னையை அடுத்த நங்கநல்லூர் லட்சுமி நகரில் மத்திய அரசு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற ஒருவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இறந்தவரின் மனைவி, மகன், மருமகள் ஆகிய மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

உயிரிழந்த ஓய்வுபெற்ற அதிகாரியின் மனைவி, அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய மகன் மற்றும் மருமகள் ஆகியோர் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆதம்பாக்கம் ராம்நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த ஒரு நோயாளிக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர், உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து அந்த தனியார் ஆஸ்பத்திரியில் பணியில் இருந்தவர்களுக்கு ஆலந்தூர் மண்டல சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் மற்றும் பெண் வரவேற்பாளர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து 2 பேரும் தனிமைப்படுத்தபபட்டனர். மேலும் அந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கு கொரோனா தொற்று பரவக்கூடும் என்பதால் அந்த தனியார் ஆஸ்பத்திரியை மூட மாநகராட்சி அறிவுறுத்தியதால் உடனடியாக தனியார் ஆஸ்பத்திரி மூடப்பட்டது.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ரெயில்வே ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர், கடந்த 29ந் தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை உயிரிழந்தார்.


Next Story