கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு வரவேற்பு விழாவில் சமூக இடைவெளி கேள்விக்குறி - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு


கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலு வரவேற்பு விழாவில் சமூக இடைவெளி கேள்விக்குறி -  எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 3 Jun 2020 3:30 AM IST (Updated: 3 Jun 2020 2:04 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநில சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவிற்கான வரவேற்பு விழாவில் பா.ஜனதாவினர் சமூக இடைவெளியை மறந்து ஒன்று திரண்டிருந்தனர். இதனால் அங்கு சமூக இடைவெளி கேள்விக்குறியானது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்து குற்றம்சாட்டி உள்ளனர்.

சித்ரதுர்கா,

சித்ரதுர்கா மாவட்டம் செல்லக்கெரே தாலுகா பரசுராம்புரா கிராமத்தையொட்டி வேதாவதி ஆறு ஓடுகிறது. நேற்று அந்த ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள வி.வி.சாகரா அணையை பார்வையிடுவதற்காகவும், அங்கு நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவும் மாநில சுகாதார துறை மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான ஸ்ரீராமுலு வந்தார்.

அப்போது அவரை வரவேற்பதற்காக பரசுராம்புரா கிராமத்தில் பா.ஜனதா தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கூட்டமாக திரண்டனர். டிராக்டரில் வந்த மந்திரி ஸ்ரீராமுலுவை, அவர்கள் மலர்கள் தூவியும், பொக்லைன் எந்திரம் மூலம் பிரமாண்ட ஆப்பிள் மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அப்போது மந்திரி ஸ்ரீராமுலு உள்பட அங்கிருந்தவர்கள் யாரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை. முக கவசங்களும் அணியவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மக்கள் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முக கவசங்கள் அணிய வேண்டும் என்று அரசே வலியுறுத்தி வரும் நிலையில் மாநில சுகாதார துறை மந்திரியே இவ்வாறு அலட்சியமாக நடந்து கொள்ளலாமா? என்று பலர் தங்களை கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே பரசுராம்புரா கிராமத்தில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மந்திரி ஸ்ரீராமுலு, “கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மக்கள் கட்டாயம் முக கவசங்கள் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்“ என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இதுபற்றி அறிந்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மந்திரி ஸ்ரீராமுலுவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து குற்றம்சாட்டி உள்ளனர். அவர்கள் சமூக வலைத்தளங்களில் மந்திரி ஸ்ரீராமுலுவுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Next Story