கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு கல்வித்துறை தகவல்


கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு கல்வித்துறை தகவல்
x
தினத்தந்தி 3 Jun 2020 3:23 AM IST (Updated: 3 Jun 2020 3:23 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஜூலை மாதம் 1-ந் தேதி பள்ளிகளை திறக்க திட்டமிட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக அரசின் பள்ளி கல்வித்துறை கமிஷனர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களை திறப்பது தொடர்பாக மத்திய அரசு சில வழிகாட்டுதலை பின்பற்றும்படி கூறியுள்ளது. அதன்படி பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்களை திறப்பது தொடர்பாக நேற்று முன்தினம் எனது தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் கர்நாடகத்தில் ஜூலை 1-ந் தேதி முதல் பள்ளிகளை படிப்படியாக திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, 4-ம் வகுப்பில் இருந்து 7-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு வருகிற ஜூலை மாதம் 1-ந் தேதியும், 1-ம் வகுப்பில் இருந்து 3-ம் வகுப்பு வரை மற்றும் 8-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 15-ந் தேதியும், மழலையர் பள்ளிகளை ஜூலை 20-ந் தேதியும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே கர்நாடகத்தில் மீண்டும் பள்ளிகளை திறப்பது தொடர்பாக ஒவ்வொரு பள்ளியும் குழந்தைகளின் பெற்றோரிடம் கருத்து கேட்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் வருகிற 10-ந் தேதி முதல் 12-ந் தேதிக்குள் பெற்றோரிடம் கருத்துகளை கேட்டு, அறிக்கையை கல்வித்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பள்ளி நிர்வாகங்கள், பெற்றோரிடம், பள்ளிகளை மீண்டும் திறக்கும் தேதி, பள்ளிகளில் தனிமனித விலகலை பின்பற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய எந்த மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்த கேள்விகளுக்கு ஆலோசனைகளை பெற வேண்டும்.

பள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளின் பெற்றோரும் தங்களின் கருத்துகளை தெரிவிக்க வேண்டும்.

வருகிற 5-ந் தேதி பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளை திறந்து மாணவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 8-ந் தேதி குழந்தைகள் சேர்க்கை பணிகளை தொடங்கலாம். 15-ந் தேதியில் இருந்து 30-ந் தேதி வரை குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்கான விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி நடத்த வேண்டும். இவ்வாறு கமிஷனர் தெரிவித்துள்ளார்.

Next Story