ஊரடங்கு தளர்வால் பஸ்கள் இயக்கம்: குறைந்த அளவிலேயே அனுமதிப்பதால் மணிக்கணக்கில் காத்திருக்கும் பயணிகள்
ஊரடங்கு தளர்வால் பஸ்கள் இயக்கப்பட்டது. குறைந்த அளவிலேயே அனுமதிப்பதால் மணிக்கணக்கில் பயணிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கோவை,
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பஸ், ரெயில், ஆட்டோக்கள் இயக்க தடைவிதிக்கப்பட்டது. தற்போது 5-ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டாலும் இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று முன்தினம் முதல் பஸ், ரெயில்கள் இயங்கி வருகின்றன.
அதில் கோவையில் 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் முதல் நாள் என்பதால் பயணிகள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை. ஆனால் நேற்று கோவை காந்திபுரம் பஸ்நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகளவு இருந்தது.
மணிக்கணக்கில் காத்திருப்பு
இந்த பஸ்களில் கூட்டம் குறைவாக இருந்தாலும் சில வழித்தடங்களில் அதிகளவில் பயணிகளின் கூட்டம் காணப்படுகிறது. பஸ்களில் குறைந்த அளவிலேயே பயணிகள் அனுமதிக்கப்படுவதால் சில வழித்தடங்களில் பஸ்சுக்காக மணிக்கணக்கில் பயணிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. பஸ்சில் பயணிகள் முகக்கவசம் அணிந்தே பயணம் செய்கின்றனர்.
ஆனால் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை. சில தனியார் பஸ்களில் அதிக எண்ணிக்கையில் பயணிகள் ஏற்றப்படுகிறார்கள். மேலும் இருக்கைகளில் இடைவெளி இல்லாமல் பயணிகள் அமரவைக்கப்படுகிறார்கள். இதேபோல் சில அரசு பஸ்களில் கண்டக்டர் கேட்டுக் கொண்டாலும் கூட்டம் காரணமாக பயணிகள் அருகருகே உட்கார்ந்து கொள்கிறார்கள்.
நேற்று முன்தினம் முதல் நாளில் அரசுக்கு எவ்வளவு வருவாய் கிடைத்தது என்பது குறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:-
ரூ.33½ லட்சம் வருவாய்
அரசு உத்தரவின்படி கோவை மண்டலத்தில் 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு அவர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்துகொடுக்கப்பட்டு உள்ளது. 2 பேர் அமரும் இருக்கையில் ஒருவரும், 3 பேர் அமரும் இருக்கையில் 2 பேரும் உட்கார அனுமதிக்கப்பட்டனர்.
கோவையை பொறுத்தமட்டில் கோவை மாநகரில் 262 பஸ்களும், புறநகர் மற்றும் பிற மாவட்டங்களுக்கு 113 பஸ்கள் என மொத்தம் 375 பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பழைய நடைமுறையில் இருந்த கட்டணமே வசூலிக்கப்பட்டது. அதன்படி முதல்நாளான 1-ந் தேதி அன்று கோவை மாவட்டத்தில் ரூ.15.48 லட்சமும், நீலகிரி மாவட்டத்தில் ரூ.5.06 லட்சமும், திருப்பூர் மாவட்டத்தில் 4.94 லட்சமும், ஈரோடு மாவட்டத்தில் 8.04 லட்சமும் என மொத்தம் ரூ.33 லட்சத்து 52 ஆயிரம் வசூலாகி உள்ளது. இதுவே கொரோனாவுக்கு முந்திய காலக்கட்டத்தில் ஒரு நாளில் ரூ.3½ கோடி வசூலாகும். இதனால் தற்போது வசூலான தொகையானது பல மடங்கு குறைந்து உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story