கர்நாடகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா 370 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்


கர்நாடகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா 370 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்
x
தினத்தந்தி 3 Jun 2020 5:00 AM IST (Updated: 3 Jun 2020 4:38 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக ஒரே நாளில் 388 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இவர்களில் 370 பேர் மராட்டியம் உள்பட வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
கர்நாடத்தில் கொரோனா பாதிப்பு 2 வாரங்களுக்கு முன்பு வரை கட்டுக்குள் இருந்தது. தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 என்ற அளவில் இருந்து கொண்டு இருந்தது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு வெளிமாநிலங்களில் இருந்து கர்நாடகத்திற்கு வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை தொடர்ந்து கொரோனா பாதிப்பும் அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக மராட்டியத்தில் இருந்து வந்தவர்களால் பாதிப்பு எண்ணிக்கை 100-க்கும் மேல் அதிகரிக்க தொடங்கியது. இதில் கர்நாடகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக நேற்று ஒரே நாளில் 388 பேர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 3,354 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று புதிதாக 388 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 370 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இந்த 370 பேர்களில் 363 பேர் மராட்டியத்தில் இருந்தும், 4 பேர் டெல்லியில் இருந்தும் வந்தவர்கள். மற்ற 3 பேர் ஆந்திரா, கோவா மற்றும் குஜராத்தில் இருந்து வந்தவர்கள்.

நேற்று ஒரே நாளில் 388 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து கர்நாடகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,742 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை 54 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 1,403 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 75 பேர் குணமடைந்து வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. 2,339 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

புதிதாக கொரோனா பாதித்தவர்களில் உடுப்பியில் 150 பேர், கலபுரகியில் 100 பேர், பெங்களூரு நகரில் 12 பேர், யாதகிரியில் 5 பேர், மண்டியாவில் 4 பேர், ராய்ச்சூரில் 16 பேர், பெலகாவியில் 51 பேர், ஹாசனில் 9 பேர், பீதரில் 10 பேர், தாவணகெரேயில் 7 பேர், சிக்பள்ளாப்பூரில் 2 பேர், விஜயாப்புராவில் 4 பேர், பாகல்கோட்டையில் 9 பேர், தார்வாரில் 2 பேர், துமருகூருவில் 2 பேர், கோலாரில் ஒருவர், பெங்களூரு புறநகரில் 3 பேர், ஹாவேரியில் ஒருவர் ஆகியோர் ஆவர்.

கர்நாடகத்தில் இதுவரை 3 லட்சத்து 19 ஆயிரத்து 628 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 14 ஆயிரத்து 812 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 32 ஆயிரத்து 239 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கர்நாடகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 388 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் மராட்டிய மாநிலத்தில் இருந்து கர்நாடகத்திற்கு வந்திருப்பதால், அடுத்து வரும் நாட்களிலும் கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது கர்நாடக மாநில அரசுக்கு பெரிய தலைவலியாக உருவெடுத்துள்ளது. கர்நாடகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது, அரசையும், பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Next Story