காற்றில் பறந்த சமூக இடைவெளி அறிவுரை: பஸ்களில் நிரம்பி வழிந்த பயணிகள் கூட்டம் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
திண்டுக்கல்லில் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்ததால், சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
திண்டுக்கல்,
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 2 மாதங்களாக பஸ்கள் இயக்கப்படவில்லை. இதற்கிடையே ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தியதோடு, பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பஸ்களை இயக்குவதற்கு அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், பஸ்களில் 60 சதவீத பயணிகளை மட்டுமே ஏற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 216 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் முதல் நாளில் பெரும்பாலான பஸ்களில் பயணிகள் கூட்டம் இல்லை. அதிலும் ஒருசில பஸ்களில் ஒன்றிரண்டு பயணிகள் மட்டுமே பயணித்தனர்.
நிரம்பி வழிந்த பயணிகள்
இதற்கிடையே நேற்று பெரும்பாலான பஸ்களில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. அதிலும் கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, இருக்கைகளில் பயணிகள் நெருக்கமாக அமரும் நிலை உருவானது. மேலும் சிலர் இருக்கை கிடைக்காமல் நின்று கொண்டே பயணித்தனர்.
அந்த கூட்டத்துக்கு நடுவே கண்டக்டர்கள் சென்று டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் நிலை ஏற்பட்டது. அதிலும் சிலர் அலட்சியமாக முக கவசம் அணியாமல் பஸ்களில் பயணித்தனர். கண்டக்டர் அறிவுரையின் பேரில் துணியால் முகத்தை மூடிக்கொண்டனர். அதேபோல் பஸ்களில் ஏறும்போதும், இறங்கும் போதும் சமூக இடைவெளியை கூட கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
கூடுதல் பஸ்கள்
அதேநேரம் பஸ் போக்குவரத்து தொடங்கிய 2-வது நாளிலேயே பயணிகள் கூட்டம் அதிகரித்து இருக்கிறது. எனவே, அடுத்த ஒருசில நாட்களில் பயணிகள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அத்தகைய சூழல் ஏற்பட்டால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாமல், கொரோனா சமூக தொற்றாக மாறும் நிலை ஏற்படும்.
இதை தவிர்ப்பதற்கு கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். அதேபோல் பஸ்சில் ஏறும் போதும், இறங்கும் போதும் பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Related Tags :
Next Story