குமரி மாவட்டத்தில் பரவலாக மழை அதிகபட்சமாக திற்பரப்பில் 75.8 மி.மீ. பதிவு
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக திற்பரப்பில் 75.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக திற்பரப்பில் 75.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
பருவமழை
கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கி விட்டது. இதனால் பக்கத்து மாவட்டமான குமரியிலும் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று காலை வரை விடிய விடிய கொட்டி தீர்த்தது.
நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், பூதப்பாண்டி, சுருளோடு, கன்னிமார், ஆரல்வாய்மொழி, கொட்டாரம், மயிலாடி, மார்த்தாண்டம், களியக்காவிளை, தக்கலை, இரணியல், குளச்சல் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. அதோடு மலையோர பகுதிகள் மற்றும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
சாலையில் தண்ணீர்
நாகர்கோவில் பகுதிகளில் காலை 6 மணி அளவில் பலத்த மழை பெய்தது. அதன் பிறகும் லேசான மழை விட்டு விட்டு பெய்தது. மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதாவது அவ்வை சண்முகம் சாலை, கேப் ரோடு, கே.பி. ரோடு, செம்மாங்குடி சாலை, கோர்ட்டு ரோடு, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் தண்ணீர் சுமார் 2 அடி வரை தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். பின்னர் மழை ஓய்ந்ததும் தண்ணீர் மெல்ல மெல்ல வடிந்தோடியது.
தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்
வற்றாத ஜீவநதியாக விளங்கும் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் குழித்துறை சப்பாத்து தடுப்பணையை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்கிறது. அதைத்தொடர்ந்து வெட்டுமணி மற்றும் குழித்துறை என தடுப்பணையின் இரு கரை பகுதிகளிலும் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மழை அளவு
குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
திற்பரப்பு-75.8, பேச்சிப்பாறை-60.6, பெருஞ்சாணி -44.8, சிற்றார்-1 42, சிற்றார்-2 34, மாம்பழத்துறையாறு- 54, புத்தன்அணை-44, முள்ளங்கினாவிளை-35, அடையாமடை-32, கோழிப்போர்விளை- 51, திருவட்டார்- 12.6, நாகர்கோவில்-41.2, பூதப்பாண்டி-25.8, சுருளோடு- 46.8, கன்னிமார்-46.8, பாலமோர்-52.4, கொட்டாரம்- 37.4, மயிலாடி-8.2, குளச்சல்-16.4, இரணியல்-32.6, ஆனைக்கிடங்கு-52.4, குழித்துறை-64, முக்கடல்-27.2, ஆரல்வாய்மொழி-12 என்ற அளவில் மழை பெய்து இருந்தது.
அணை நிலவரம்
மழை காரணமாக அணைகள் மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு 478 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணைக்கு 263 கனஅடி தண்ணீர் வந்தது. சிற்றாறு-1 அணைக்கு 100 கனஅடியும், சிற்றாறு-2 அணைக்கு 143 கன அடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 3 கனஅடியும் தண்ணீர் வந்தது.
மேலும் மாவட்டத்தில் கன்னிப்பூ விவசாய பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுசீந்திரம், அக்கரை, அருமநல்லூர், பூதப்பாண்டி மற்றும் தக்கலை பகுதிகளில் நடவு பணிகள் நடந்து வருகிறது. விவசாயத்திற்கு தேவையான விதை நெல்களும் தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. எனவே தொடர்ந்து பெய்து வரும் மழை விவசாயிகளுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
கட்டுமரங்கள் கடலுக்கு செல்லவில்லை
குளச்சல் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியதால் கட்டுமரங்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அவை மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
குளச்சல் பகுதியில் 1000-க் கும் மேற்பட்ட பைபர் வள்ளங்கள், கட்டுமரங்கள் மீன் பிடித்தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றன.கடலில் மழை மற்றும் காற்று காரணமாக குளச்சல், சைமன்காலனி, கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை கட்டுமர மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், குளச்சல் சுற்று வட்டார பகுதியில் மீன்வரத்து வெகுவாக குறைந்தது. வியாபாரிகள், மீன் பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
Related Tags :
Next Story