திருக்கழுக்குன்றம் அருகே தந்தை, மகன் தூக்குப்போட்டு தற்கொலை


திருக்கழுக்குன்றம் அருகே தந்தை, மகன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 3 Jun 2020 5:43 AM IST (Updated: 3 Jun 2020 5:43 AM IST)
t-max-icont-min-icon

திருக்கழுக்குன்றம் அருகே தந்தை, மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

கல்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). அருகில் உள்ள நெல் அரவை ஆலையில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மனைவியை இழந்த இவர், தன்னுடைய இளைய மகன் அன்பு (16) உடன் வசித்து வந்தார்.

நேற்று காலை நீண்ட நேரமாகியும் ஆறுமுகத்தின் வீடு திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக வீட்டின் உள்ளே எட்டிப்பார்த்தனர்.

அங்கு அன்பு தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவருக்கு கீழே தரையில் ஆறுமுகம் பிணமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீஸ் விசாரணை நடத்தினர். அதில், நேற்று முன்தினம் குடிபோதையில் வீட்டுக்கு வந்த ஆறுமுகத்தை அவரது மகன் அன்பு, ஏன் தினந்தோறும் மது குடித்து விட்டு வருகிறீர்கள் என கண்டித்ததாக தெரிகிறது. இதனால் வருத்தம் அடைந்த ஆறுமுகம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் எழுந்து பார்த்த அன்பு, தனது தந்தை தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவரது உடலை கீழே இறக்கி வைத்து விட்டு அதே கயிற்றில் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ஒரே நேரத்தில் தந்தைமகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story