நாகர்கோவிலில் பழ குடோனில் ரூ.17 லட்சம் கொள்ளை திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் கைது
நாகர்கோவிலில் பழ குடோனில் ரூ.17 லட்சம் கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டார். அவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்துள்ளது.
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் பழ குடோனில் ரூ.17 லட்சம் கொள்ளையடித்தவர் கைது செய்யப்பட்டார். அவர் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
ரூ.17 லட்சம் கொள்ளை
நாகர்கோவிலை அடுத்த வடக்கு சூரங்குடி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 42). இவர் நாகராஜா கோவில் குறுக்கு சாலையில் பழ குடோன் மற்றும் பழக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று அதிகாலையில் குடோனின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. தகவல் அறிந்த சிவகுமார் குடோனுக்கு விரைந்து வந்தார். பின்னர் கடைக்குள் சென்று பார்த்தபோது பணம் கட்டு கட்டாக கடைக்குள் சிதறிக்கிடந்தன. மேஜையில், சிவக்குமார் வைத்து இருந்த ரூ.23 லட்சத்தில் ரூ.17 லட்சத்து 7 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இரவில் மர்ம நபர் கடைக்குள் புகுந்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இந்த சம்பவம் பற்றி வடசேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது குடோனுக்குள் புகுந்த மர்ம நபர் அங்கு வைத்திருந்த பணத்தில் 17 லட்சத்து 7 ஆயிரத்தை மட்டும் கொள்ளையடித்து சென்றுள்ளார். மீதி பணத்தை அங்கேயே விட்டு சென்றது எதற்காக என்பது தெரியவில்லை.
கண்காணிப்பு கேமரா
மேலும் குடோனுக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு பழ குடோனில் மேஜையில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். குடோனில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
அப்போது மர்ம நபர் ஒருவர் முகமூடி அணிந்து நள்ளிரவு 1 மணி அளவில் குடோனின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. கடைக்குள் மேஜையில் இருந்த பணத்தை அவர் கொண்டு சென்ற பைக்குள் எடுத்து வைக்கிறார். பை நிரம்பியதும் மீதி பணத்தை அங்கேயே விட்டு விட்டு மர்ம நபர் வெளியே செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது. எனவே கொள்ளை 1 மணியில் இருந்து 2 மணிக்குள் நடந்துள்ளது. அதைத்தொடர்ந்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தினர்.
கைது
கொள்ளையனை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவின்படி, வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் சம்சீர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி போது, கொள்ளையன் கேரள மாநிலம் திருவனந்தபுரம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்த முத்துசாமி(வயது 67) என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி நேற்று மாலை 4 மணிக்கு முத்துசாமியை ஒழுகினசேரியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மடக்கி பிடித்தனர்.
பின்னர் அவரை வடசேரி போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், கேரளா, ஓசூர் மற்றும் குமரி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் நடந்த திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துசாமியை ஒரு திருட்டு வழக்கில் கோட்டார் போலீசார் கைது செய்து ஜாமீனில் விட்டனர். இந்த நிலையில் கொள்ளை நடந்த சுமார் 14 மணி நேரத்தில் கொள்ளையன் முத்துசாமியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் முத்து சாமியிடம் இருந்து ரூ.17 லட்சத்து 7 ஆயிரம் மீட்கப்பட்டது.
Related Tags :
Next Story