புகார்களை விசாரிப்பது கவர்னரின் வேலை இல்லை; முதல்-அமைச்சர் ஆவேசம்


புகார்களை விசாரிப்பது கவர்னரின் வேலை இல்லை; முதல்-அமைச்சர்  ஆவேசம்
x
தினத்தந்தி 3 Jun 2020 5:54 AM IST (Updated: 3 Jun 2020 5:54 AM IST)
t-max-icont-min-icon

புகார்களை விசாரிப்பது கவர்னரின் வேலை இல்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

சட்டசபை வளாகத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் இந்த நோய் தொற்று வேகமாக பரவுகிறது. எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும். திருமண மண்டபங்களில் திருமணம் நடத்த அனுமதி கொடுக்குமாறு கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அங்கு ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களில் 50 பேர் வரை கலந்து கொள்ளலாம். அதே நேரத்தில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும்.

புதுவை பெரிய மார்க்கெட்டில் காய்கறி கடைகள் மீண்டும் செயல்பட உள்ளன. இங்கு கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். இல்லையென்றால் கோயம்பேடு மார்க்கெட் கதையாகி விடும். விதிமுறைகளை மீறி செயல்பட்டால் கடைகள் மூடப்படும். நடைபாதையில் கடைகள் வைக்கக்கூடாது.

கவர்னர் கிரண்பெடி 50 ஆயிரம் புகார்களுக்கு தீர்வு கண்டு இருப்பதாக பத்திரிகைகளில் படித்தேன். அதை பார்த்ததும் எனக்கு சிரிப்புதான் வந்தது. கவர்னர் மாளிகை புகார் பெறும் அலுவலகம் அல்ல. அவர் எந்த புகாரை பெற்றாலும் முதல்-அமைச்சர் வழியாக சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அனுப்ப வேண்டும். புகார்களை விசாரிப்பது கவர்னரின் வேலை அல்ல. அவர் விசாரணை அதிகாரியும் அல்ல. புகார்களை நேரடியாக விசாரிக்கும் அதிகாரமும் அவருக்கு இல்லை.

அவர் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வேலையை செய்து வருகிறார். ஜனநாயகத்துக்கு இடையூறு ஏற்படும் விதமாக செயல்படுகிறார். மக்கள் மத்தியில் தன்னை பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். அவர் சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய். தனிப்பட்ட முறையில் அவருக்கு புகார் பெற அதிகாரம் இல்லாத நிலையில் 50 ஆயிரம் புகார்களுக்கு தீர்வு கண்டுள்ளேன் என்பது நம்ப முடியாதது.

அரசியலமைப்பு சட்டத்தையோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையோ அவர் மதிப்பது கிடையாது. பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறார். புதுவை மக்களின் வளர்ச்சிக்கு கவர்னர் எதுவும் செய்யவில்லை. திட்டங்களை தடுத்து நிறுத்தியது தான் அவரது சாதனை. தொடர்ந்து புதுவை மக்களுக்கு அவர் துரோகம் செய்து வருகிறார். இவரால் மக்கள் வேதனையை அனுபவித்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story