ஓசூரில் பா.ஜனதா பிரமுகரின் காரை கடத்திய 2 பேர் சிக்கினர்


ஓசூரில் பா.ஜனதா பிரமுகரின் காரை கடத்திய 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 3 Jun 2020 6:47 AM IST (Updated: 3 Jun 2020 6:47 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் பா.ஜனதா பிரமுகரின் காரை கடத்திய 2 பேரை சிங்காரப்பேட்டை அருகே போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

ஓசூர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நேரு நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் கே.எஸ்.நரேந்திரன். பா.ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர். இவர் தனக்கு சொந்தமான 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை தனது வீட்டை ஒட்டியுள்ள காலி இடத்தில் நேற்று முன்தினம் இரவு நிறுத்தி இருந்தார். நேற்று அதிகாலை முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் 3 பேர் காரை திருடி சென்று விட்டனர். நேற்று அதிகாலை பார்த்தபோது காரை காணவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது நரேந்திரன் வீட்டின் முன்பு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். மேலும் காரில் இருந்த ஜி.பி.எஸ். கருவி மூலமும் கண்காணித்தனர். அப்போது கார் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப் பேட்டை பகுதியில் நேற்று மதியம் 2.30 மணிக்கு சென்றது தெரியவந்தது.

இதனால் சிங்காரப்பேட்டை போலீசார் உஷார்படுத்தப்பட்டு, காரை பின்தொடர்ந்து விரட்டி சென்றனர். இதை கவனித்த மர்ம நபர்கள் போலீசாரிடம் இருந்து தப்பிக்க தீர்த்தகிரி வலசை ஏரிக்கரை மண் சாலையில் காரை வேகமாக ஓட்டி சென்றனர். ஆனால் தொடர்ந்து செல்ல அங்கு சாலை வசதி இல்லாததால் பள்ளத்தில் கார் கவிழ்ந்து, ஏரி மதகு மீது மோதி நின்றது.

இந்த விபத்தில், காரில் இருந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ராம்ஜி என்பவர் தப்பி ஓடி விட்டார். மேலும் காரில் இருந்த சென்னையை சேர்ந்த தினகரன், மாமணி ஆகிய 2 பேரையும் போலீசார் மடக்கிப்பிடித்தனர். கார் கவிழ்ந்ததில் 2 பேருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் சிக்கிய காரை கிரேன் மூலம் போலீசார் மீட்டனர். இந்த கார் கர்நாடக மாநில பதிவு எண் கொண்டது. காரை திருடியவர்கள், போலீசார் தங்களை பிடித்து விடாமல் இருக்க தமிழக பதிவு எண் கொண்ட நம்பர் பிளேட்டை போலியாக காரில் பொருத்தி யுள்ளனர். இதுபற்றி ஓசூர் டவுன் போலீசார் சிங்காரப் பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story