ஊரடங்கு கெடுபிடி இல்லாததால் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது; சமூக இடைவெளி மாயமானது


ஊரடங்கு கெடுபிடி இல்லாததால்  மக்கள் கூட்டம் அலை மோதுகிறது; சமூக இடைவெளி மாயமானது
x
தினத்தந்தி 3 Jun 2020 7:16 AM IST (Updated: 3 Jun 2020 7:16 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் ஊரடங்கு கெடுபிடி இல்லாததால் அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சமூக இடைவெளி மாயமானது.

மதுரை, 

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பொது போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் கடந்த மாதம் 4-ந் தேதி ஊரடங்கில் ஊரடங்கில் தளர்வு கொடுக்கப்பட்டது. அதன்காரணமாக அனைத்து தனிக்கடைகளும் திறக்கப்பட்டன. கடந்த 1-ந் தேதி முதல் ஊரடங்கில் மேலும் தளர்வு கொடுக்கப்பட்டதால் தமிழகத்தில் அரசு பஸ் போக்குவரத்து தொடங்கி உள்ளது. இரவு 8 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் இந்த காலகட்டத்தில் வீட்டை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதவிர பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவுகள் உள்ளன. ஆனால் தற்போதைய நிலையில் அனைத்து உத்தரவுகளும் காற்றில் பறக்கின்றன. இரவு 10 மணி ஆனாலும் சாலைகளில் மக்கள் கூட்டம் உள்ளது.

கட்டுக்குள் இருந்தது

மதுரையை பொறுத்தவரை தற்போது 269 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 174 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். 92 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். மதுரையில் கொரோனா பரவுதலை தடுக்க கடந்த ஏப்ரல் மாதத்தில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தன. மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் இணைந்து மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட்டுகளை மூடினர். சில மார்க்கெட்டுகளை பிரித்தனர். கீழமாசி வீதியில் மொத்த வியாபாரம் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

மக்களும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று போலீசாரும் கடுமை காட்டினார். கடுமையான நடவடிக்கையால் கொரோனா பரவுதல் கட்டுக்குள் இருந்தது. ஆனால் கடந்த மாதத்தில் இருந்து ஊரடங்கில் தளர்வு கொடுக்கப்பட்டதால் போலீசாரின் கெடுபிடியும் தளர்ந்து போனது.

கோயம்பேடு

தற்போது மதுரையில் அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள் வாங்க கீழமாசி வீதிக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதுதவிர அங்கு லாரிகளும், சரக்கு வாகனங்களும் அதிக அளவில் குவிகின்றன. இதனால் சென்னையில் கொரோனா பரவுதலுக்கு காரணமான கோயம்பேடு மார்க்கெட் போல கீழமாசி வீதியும் காரணம் ஆகிவிடுமோ என்று சமூக ஆர்வலர்கள் அச்சப்படுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

தற்போது மாட்டுத்தாவணி, பரவை மற்றும் கீழமாசி வீதிகளில் தான் அதிகம் கூட்டம் கூடுகிறது. அதில் மாட்டுத்தாவணியிலும், பரவையிலும் அதிகாரிகளின் கட்டுப்பாடுகள் இருப்பதால் சமுக இடைவெளி காக்கப்படுகிறது. ஆனால் கீழமாசி வீதியில் எந்த கட்டுப்பாடும் இல்லாமல் உள்ளது. அந்த பகுதியில் வாடகை லாரி நிலையங்களும் அதிகமாக இருப்பதால் மக்கள் மற்றும் வாகனங்களால் நிரம்பி வழிகிறது. மதுரை மக்கள் பெரும்பாலும் கீழமாசி வீதியில் பொருட்கள் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் கீழமாசி வீதியில் விலை குறைவாக இருக்கும் என்று வருகின்றனர். தற்போது வரை கொரோனா பரவுவது முழுமையாக கட்டுப்படுத்தப்பட வில்லை என்பதனை பொதுமக்கள் முதலில் உணர வேண்டும். கொரோனா ஒருவருக்கு வந்தால் அவர் மூலம் எளிதாக பலருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே மக்கள் சிறிது காலத்திற்கு சமூக இடைவெளியை முழுமையாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story