குடும்பத்தகராறில் விபரீத முடிவு பச்சிளம் பெண் குழந்தையை விஷம் கொடுத்து கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்
குடும்பத்தகராறு காரணமாக பச்சிளம் பெண் குழந்தையை விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலைக்கு முயன்றார்.
உப்பிலியபுரம்,
குடும்பத்தகராறு காரணமாக பச்சிளம் பெண் குழந்தையை விஷம் கொடுத்து கொன்று தாய் தற்கொலைக்கு முயன்றார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல் திருமணம்
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உப்பிலியபுரத்தை அடுத்த புதுப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 27). பொக்லைன் எந்திர ஆபரேட்டர். இவருடைய மனைவி நித்யா(26). கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இவர்கள் ஈரோட்டில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர், உப்பிலியபுரம் அருகே கிருஷ்ணாபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி குடும்பம் நடத்தி வந்தனர். இவர்களுக்கு 2 வயதில் ஜாக்சனா என்ற மகள் உள்ளாள். மேலும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நித்யாவுக்கு ஒரு மாதத்துக்கு முன்புதான் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தாவன்யா என்று பெயர் சூட்டினர்.
குடும்பத்தகராறு
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் அனைவரும் தூங்க சென்றுவிட்டனர். நேற்று அதிகாலையில் சுரேஷ்குமார் வழக்கம் போல் வேலைக்கு சென்றுவிட்டார். அப்போது, அவருடைய செல்போனுக்கு வீட்டில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதை எடுத்து பேசியபோது, அவருடைய மூத்த மகள் ‘அம்மா விஷம் குடித்து விட்டார் என்று கூறியுள்ளாள். உடனே பதறி அடித்து வீட்டிற்கு வந்தபோது, நித்யாவும், பச்சிளம் குழந்தை தாவன்யாவும் மயங்கி கிடந்தனர்.
குழந்தை சாவு
உடனே அவர்களை மீட்டு அக்கம், பக்கத்தினர் உதவியுடன் சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பச்சிளம் குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நித்யா மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
தற்கொலை முயற்சி
விசாரணையில், குடும்பத்தகராறு காரணமாக தனது இளையமகளான பச்சிளம் குழந்தை தாவன்யாவுக்கு எலிமருந்து (விஷம்) கொடுத்து கொன்றுவிட்டு, நித்யாவும் அதை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் தனது கணவருக்கு போன் செய்து, செல்போனை தனது மூத்த மகளிடம் கொடுத்து, அம்மா விஷம் குடித்து விட்டதாக கூறும்படி தெரிவித்ததும் தெரியவந்தது.இதுகுறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story