புதிய தொழில் முனைவோருக்கு 25 சதவீத மானியத்துடன் கடன் கலெக்டர் தகவல்
புதிய தொழில் முனைவோருக்கு 25 சதவீத மானியத்துடன் கடன் வழங்கப்படும் என்று கலெக்டர் வினய் அறிவித்துள்ளார்.
மதுரை,
மதுரை மாவட்ட கலெக்டர் வினய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்படவும், புதிய தொழில் நிறுவனங்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோர் மூலம் ஏற்படவும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலமாக அந்தந்த மாவட்டங்களில் செயல்படுகிறது. மதுரை மாவட்டத்தில் பட்டம், பட்டயம், ஐ.டி.ஐ. தொழிற்கல்வி படித்த முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்கிட இந்த திட்டத்தின் மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு 25 சதவீத அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி வழங்கப்படும்.
வட்டி மானியம்
கடன் பெறுவர்களில் பொது பிரிவினர் ஆண்களில் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினரில் பெண்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர் 5 சதவீதம் சொந்த முதலீடு செய்ய வேண்டும். தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டிமானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பொதுப்பிரிவினருக்கு 21 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பெண்கள் மற்றும் இதர பிரிவினர்களுக்கு 21 வயது முதல் 45 வயது வரை இருக்கலாம். கடனுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தமிழகத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
பயிற்சி விலக்கு
இந்த திட்டத்தின் கீழ் அடுத்த ஆண்டு(2021) ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி வரை வழங்கப்படும் கடன் திட்ட பயனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சியில் இருந்து தமிழக அரசால் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதில் பயன் பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் www.msm-e-o-n-l-i-ne.tn.gov.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்.
Related Tags :
Next Story