நரியை கொல்லும் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வாலிபர் கைது நண்பர்கள் 2 பேருக்கு வலைவீச்சு


நரியை கொல்லும் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வாலிபர் கைது நண்பர்கள் 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 3 Jun 2020 9:28 AM IST (Updated: 3 Jun 2020 9:28 AM IST)
t-max-icont-min-icon

நரியை கொன்று அதன் தோலை உரிக்கும் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கரூர், 

நரியை கொன்று அதன் தோலை உரிக்கும் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பர்கள் 2 பேரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

நரியை கொன்று...

கரூரில், கடந்த சில நாட்களாக நரியை கொன்று அதன் தோலை வாலிபர்கள் சிலர் உரிக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனை பார்த்த மாவட்ட வன அலுவலர் அன்பு இதில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் வனசரகர் நடராஜன், வனவர்கள் பாஸ்கர், செந்தமிழ்செல்வி, பெருமாள், பழனிசாமி ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கரூர் மாவட்டம், கீரனூர் பகுதியை சேர்ந்த முத்து மகன் சதீஸ்குமார் (வயது 25) என்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்ற வனத்துறையினர் அங்கிருந்த சதீஸ்குமாரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவரும், அவருடைய நண்பர்கள் சுரேஷ், தங்கராஜ் ஆகியோர் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், அவரது வீட்டில் சோதனை செய்தபோது முயல் மற்றும் நரிகளை பிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கூண்டு உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

சிறையில் அடைப்பு

இதனையடுத்து வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் சதீஸ்குமார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரை குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்பேரில், கிளை சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சுரேஷ், தங்கராஜ் ஆகியோரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

Next Story