29 டன் ரேஷன் அரிசி கடத்தல்; 9 பேர் கைது


29 டன் ரேஷன் அரிசி கடத்தல்; 9 பேர் கைது
x
தினத்தந்தி 3 Jun 2020 4:00 AM GMT (Updated: 3 Jun 2020 4:00 AM GMT)

உளுந்தூர்பேட்டை அருகே 29 டன் ரேஷன் அரிசியை கடத்திய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ரகுநாதபுரத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கடலூர் குடிமைப்பொருள் குற்றபுலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆரோக்கியஜான்சி, சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் ரகுநாதபுரத்திற்கு விரைந்து சென்று கண்காணித்தனர்.

அப்போது அங்குள்ள ஒரு சோப்பு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை சிலர் லாரி, கார் மற்றும் மினிலாரியில் ஏற்றி, கடத்திச்சென்றனர். இதைபார்த்த போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், விழுப்புரம் பாப்பன்குளத்தை சேர்ந்த ரபீக் இப்ராகீம் சுகர்ணா(வயது 42), முண்டியம்பாக்கத்தை சேர்ந்த சுலைமான்(31), திருவெண்ணெய்நல்லூரை சேர்ந்த விவேகானந்தன்(26), மணிமாறன்(23), முருகன்(45), கிளியூர் சதீஷ்குமார்(22), காணை துரைராஜ் (33), ஆரணி அருகே ஆயப்பட்டி உதயகுமார்(37), குடியாத்தம் கார்த்திக்(32) ஆகியோர் என்பதும், கர்நாடக மாநிலத்துக்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் 29 டன் அரிசி, இதை கடத்த பயன்படுத்திய லாரி மற்றும் மினிலாரி, கார் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் கைதான ரபீக் இப்ராகீம் சுகர்ணா மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 

Next Story