சிவகங்கை மாவட்டத்தில் சவடு மண் எடுக்க அனுமதித்ததை ரத்து செய்யக்கோரி வழக்கு கலெக்டர் விரிவான பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


சிவகங்கை மாவட்டத்தில் சவடு மண் எடுக்க அனுமதித்ததை ரத்து செய்யக்கோரி வழக்கு கலெக்டர் விரிவான பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 3 Jun 2020 9:31 AM IST (Updated: 3 Jun 2020 9:31 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் சவடு மண் எடுக்க அனுமதித்ததை ரத்து செய்யக்கோரி வழக்கில் கலெக்டர் விரிவான பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை, 

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், திருநாவுக்கரசு ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, பாப்பாகுடி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சவடு மண் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு, 100 அடி ஆழத்திற்கு தனியார் நிலங்களில் தோண்டி மணல் எடுக்கின்றனர். உயரமான மண்மேட்டை சமப்படுத்துவது, பள்ளத்தை மேடாக்குவது போன்ற விவசாயம் சார்ந்த பணிகளுக்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்குகிறது. இதை பயன்படுத்தி, சிலர் முறைகேடாக மணலை எடுத்து விற்பனை செய்கின்றனர்.

இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு மட்டுமின்றி நிலத்தடி நீரும், விவசாயமும் பாதிக்கப்படுகிறது. தற்போது தனியார் நிலத்தில் மண் எடுக்க அனுமதி கேட்டு பலர் சிவகங்கை கலெக்டரிடம் விண்ணப்பித்து உள்ளனர். எனவே சிவகங்கை மாவட்டத்தில் சவடு மற்றும் உவரி மண் எடுக்க அனுமதி வழங்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “ஏற்கனவே மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் சவடு மண் எடுக்க மதுரை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. அதையும் மீறி தற்போது சவடு மண் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும்“ என வாதாடினார்.

இதையடுத்து நீதிபதிகள் இந்தவழக்கு குறித்து சிவகங்கை கலெக்டர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Next Story