சிறப்பு ரெயிலில் சொந்த மாநிலம் செல்வதற்காக ரெயில் நிலையம் அருகே குடும்பத்தோடு காத்திருக்கும் தொழிலாளர்கள்


சிறப்பு ரெயிலில் சொந்த மாநிலம் செல்வதற்காக  ரெயில் நிலையம் அருகே குடும்பத்தோடு காத்திருக்கும் தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 3 Jun 2020 10:53 AM IST (Updated: 3 Jun 2020 10:53 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் ரெயில் நிலைய பகுதிகளில் சிறப்பு ரெயிலில் சொந்த மாநிலம் செல்வதற்காக குடும்பத்தோடு தொழிலாளர்கள் காத்திருந்தனர்.

திருப்பூர், 

வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரெயில்கள் மூலமாக திருப்பூரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். மொத்தம் 28 ரெயில்களில் அனுப்பி வைத்தும்கூட நேற்று திருப்பூர் ரெயில் நிலைய பகுதிகளில் மூட்டை, முடிச்சுகளுடன் குடும்பத்தோடு பீகார், ஒடிசா மாநில தொழிலாளர்கள் ரோட்டோரம் காத்திருந்தனர். இவர்கள் பல்லடம், அவினாசி, காங்கேயம் பகுதியை சேர்ந்தவர்கள். பெரும்பாலானவர்கள் தாங்கள் வாடகைக்கு தங்கியிருந்த அறையை காலி செய்து விட்டு திருப்பூர் வந்து விட்டதாக தெரிவித்தனர். ரெயில் வந்ததும் அதிகாரிகளிடம் பேசி எப்படியாவது தங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ரெயில் வருவது குறித்து தங்களுக்கு தகவல் கிடைக்காததால் உடனடியாக கிளம்பி வர முடியாமல் போகிறது. இதன்காரணமாக சொந்த ஊருக்கு செல்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. திருப்பூர் ரெயில் நிலைய சுற்றுப்புற பகுதிகளில் ரோட்டோரம் தங்கியிருந்தால் ரெயில் வந்ததும் தங்களை அனுப்பி வைக்க வசதியாக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஜெய்வாபாய் பள்ளி ரோடு, நஞ்சப்பா பள்ளி ரோடு, ராயபுரம், சூசையாபுரம், புஷ்பா ரவுண்டானா பகுதிகளில் ரோட்டோரம் குடும்பத்தோடு வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் நேற்று காத்திருந்தனர். ஆனால் திருப்பூரில் இருந்து நேற்று சிறப்பு ரெயில் எதுவும் இயக்கப்படவில்லை. இவர்கள் ரெயில் நிலைய பகுதியில் பிரச்சினையில் ஈடுபடாமல் தவிர்க்கும்வகையில் ரோட்டோரம் இருந்த வடமாநில தொழிலாளர்களை போலீசார் அங்கிருந்து விரட்டும்பணியில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டதும் அங்குமிங்கும் செல்லும் தொழிலாளர்கள் பின்னர் மீண்டும் ரெயில் நிலைய சுற்றுப்புற பகுதிகளிலேயே தங்கியிருக்கிறார்கள். இன்று (புதன்கிழமை) சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story