பெரம்பலூர் பாலக்கரை பெரிய ரவுண்டானாவை சிறியதாக மாற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


பெரம்பலூர் பாலக்கரை பெரிய ரவுண்டானாவை சிறியதாக மாற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 3 Jun 2020 11:12 AM IST (Updated: 3 Jun 2020 11:12 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் பாலக்கரை பெரிய ரவுண்டானாவை சிறியதாக மாற்றி விபத்துகளை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் பாலக்கரை பெரிய ரவுண்டானாவை சிறியதாக மாற்றி விபத்துகளை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய பகுதி

பெரம்பலூர் நகரில் பஸ்கள், கனரக மற்றும் இலகுரக வாகனங்கள், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை முறைப்படுத்தி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக பாலக்கரை பகுதியில் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் எதிரே 2010-ம் ஆண்டில் ரூ.23 லட்சம் செலவில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பெரிய அளவில் ரவுண்டானா அமைக்கப்பட்டு அதில் புல்வெளிகள், நீர் ஊற்றுகள், அழகிற்காக மரங்கள் அமைக்கப்பட்டது. மேலும் ,

பூங்காவை பராமரிக்கும் பணி தனியார் கல்வி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

சங்குப்பேட்டை சாலை, புதியபஸ் நிலைய சாலை, துறைமங்கலம் சாலை மற்றும் கலெக்டர் அலுவலக சாலை ஆகிய பிரதான சாலைகள் ஒரே இடத்தில் சந்திக்கும் முக்கிய பகுதியாக பாலக்கரை விளங்குகிறது.

இந்த சந்திப்பில் போக்குவரத்து நெரிசலாக உள்ள பாலக்கரை பகுதியில் விபத்துக்கள் நேரிடுவதை தவிர்க்கும் பொருட்டு ரவுண்டானாவை பெரிய அளவு என்பதை குறைத்து சிறிய அளவில் வடிவமைக்குமாறு அப்போது கலெக்டராக இருந்த விஜயகுமாரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் பொதுமக்கள் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இந்த நிலையில் பெரம்பலூர் நகரில் கடந்த 10 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகி விட்டதாலும், பொதுமக்களுக்கு வசதியாக உள்ள ஷேர் ஆட்டோக்கள், ஆட்டோக்களின் எண்ணிக்கை பெருகிவிட்டதாலும் எந்த நேரமும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

அடிக்கடி விபத்து

இதில் துறைமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம், மூன்று சாலை பகுதியில் இருந்து பெரம்பலூர் நகர நோக்கி வரும் வாகனங்கள் பாலக்கரை ரவுண்டானாவை கடந்து செல்லும்போது அதிவேகத்தில் வருவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. ரவுண்டானா பெரியதாக இருப்பதால் எதிர் எதிர் திசைகளில் வாகனங்கள் வருவதை கவனிக்க முடியாமல் விபத்தில் சிக்கி ஒரு ஆடிட்டர் உள்பட பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து சீராக நடப்பதற்கு பதிலாக மீண்டும் வாகனங்கள் நீண்ட வரிசையில் செல்லவேண்டிய நிலை இருப்பதாலும் ரவுண்டானாவின் பெரிய அளவை குறைத்து சிறிய அளவில் அமைக்குமாறு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோரிக்கை

சென்னை, கோவை, சேலம், திருப்பூர் போன்ற பெருநகரங்களில் ரவுண்டானா அமைக்கும் திட்டங்கள் கைவிடப்பட்டு வருகின்றன. திருச்சி பகுதியில் தலைமை தபால் அலுவலகம், அண்ணா சிலை உள்பட பல்வேறு பகுதிகளில் பெரிதாக இருந்த ரவுண்டானாக்கள் சிறிதாக்கப்பட்டு வருகின்றன. சிறிதாக்கப்பட்ட ரவுண்டானா பகுதிகள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்திட பெரிதும் வசதியாக உள்ளன.

இதனால் திருச்சியில் சில இடங்களில் ரவுண்டானாக்கள் அகற்றப்பட்டும் வருகின்றன. இந்த அடிப்படையில் பெரம்பலூர் நகரில் பாலக்கரை பகுதியில்உள்ள பெரிய ரவுண்டானாவை சிறியதாக மாற்றி அமைக்க நகர வர்த்தகர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டருக்கும், நெடுஞ்சாலைத்துறையினருக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story