டவுன் பஸ்களில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு; ஈரோட்டில் ஏராளமானவர்கள் குவிந்தனர்


டவுன் பஸ்களில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு; ஈரோட்டில் ஏராளமானவர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 3 Jun 2020 12:04 PM IST (Updated: 3 Jun 2020 12:04 PM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் டவுன் பஸ்களில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்ததையொட்டி நேற்று பஸ் நிலையத்தில் ஏராளமானவர்கள் குவிந்தனர்.

ஈரோடு,

கொரோனா ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டு இருப்பதால் தமிழ்நாட்டில் பஸ்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பஸ்கள் இயங்கின. ஈரோடு மாவட்டத்தில் 280 பஸ்கள் இயக்கப்பட்டன.

ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மண்டலங்களுக்குள் பஸ்கள் சென்று வருகின்றன. புறநகர் பஸ்கள் அதிக அளவில் இயக்கப்பட்டாலும் பயணிகள் எண்ணிக்கை நேற்று மிக குறைவாகவே இருந்தது. ஆனால் டவுன் பஸ்களில் நேற்று முன்தினம் இருந்ததை விட அதிக மக்கள் பயணம் செய்தனர். இதனால் ஈரோடு பஸ் நிலையம் டவுன் பஸ் நிறுத்தம் பகுதியில் ஏராளமானவர்கள் குவிந்தனர்.

அனைத்து பஸ்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பஸ்சில் போதிய இடைவெளி விட்டு பயணிகள் உட்கார்ந்த பின்னர், அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் பிறகே கண்டக்டர்கள் டிக்கெட் வழங்கினார்கள்.

ஈரோட்டில் நேற்று பல பஸ் நிறுத்தங்களிலும் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்து இருந்தனர். பஸ்களும் நிறுத்தங்களில் நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கிச்சென்றனர். பஸ்களில் பயணம் செய்யும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 

Next Story