கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு முகக்கவசம் இன்றி வருபவர்களுக்கு தடை டீன் தகவல்
கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு முகக்கவசம் இன்றி வருபவர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக டீன் காளிதாஸ் கூறினார்.
கோவை,
கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கிக்கிடந்தனர். இதனால் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை 80 சதவீதம் அளவில் குறைந்தது.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
தற்போது ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தாலும் அதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பல்வேறு கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. அத்துடன் பஸ், ரெயில் போக்குவரத்தும் இயக்கப்பட்டு வருகிறது.
இதனால் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. எனவே கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதில் முக்கியமாக முகக்கவசம் அணியாமல் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் காளிதாஸ் கூறியதாவது:-
முகக்கவசம்
கொரோனாவில் இருந்து பாதுகாக்க பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என்று அரசு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அத்துடன் சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது. இதுபோன்ற கட்டுப்பாடுகளை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் கடைபிடிக்க வேண்டும்.
அரசு ஆஸ்பத்திரிக்கு முகக்கவசம் அணியாமல் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. எனவே ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் யாராவது வந்தால் அவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை.
கிருமி நாசினி
மேலும் கோவையில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் நிறுத்தப்பட்ட அனைத்து மருத்துவ பணிகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதனால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் கைகளை கழுவ வசதியாக ஆங்காங்கே கிருமிநாசினி மற்றும் சோப்பு வைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story