மக்களிடம் பணப்புழக்கம் இல்லாததால் டாஸ்மாக் கடைகளில் விற்பனை சரிவு
மக்களிடம் பணப்புழக்கம் இல்லாததால் டாஸ்மாக் கடைகளில் விற்பனை சரிந்துள்ளது.
கோவை,
கோவை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கினால் கடந்த 2 மாதங்களாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதன்பின்னர் அந்த கடைகள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டன. ஆனால் அந்த கடைகளில் கொரோனா தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றவில்லை என்று கூறி ஐகோர்ட்டு 2 நாளிலேயே கடைகளை மூட உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
கடைகள் திறந்த 2 நாளில் விற்பனை படுஜோராக நடந்தது. ஆனால் அதன்பின்னர் விற்பனை படிப்படியாக சரியத் தொடங்கியது. கோவையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை திறந்த முதல் நாளிலேயே 12 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் தற்போது அந்த கடையில் 50 ஆயிரம் ரூபாய்க்கு கூட விற்பனையாகவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து டாஸ்மாக் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பணப்புழக்கம் இல்லை
ஊரடங்கிற்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறந்த போது கடைகள் தொடர்ந்து திறந்திருக்குமா? மூடப்படுமா? என்ற சந்தேகத்தின் பேரில் பெரும்பாலானவர்கள் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கினார்கள். ஆனால் கடைகளை தொடர்ந்து நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்ததின்பேரில் இனி கடைகளை மூடவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மதுபாட்டில்களை வாங்கி சேமித்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆனால் கொரோனா பாதிப்பினால் தொழில்கள் முடங்கி விட்டன. கடைகள் தற்போது தான் திறக்கப்பட்டுள்ளதால் விற்பனை இன்னும் சூடு பிடிக்கவில்லை. வேலையில்லாததால் பெரும்பாலான மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. இதனால் விற்பனை குறைந்துள்ளது.
மதுபாட்டில்களின் விலை உயர்ந்ததற்கும் விற்பனை குறைந்ததற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஊரடங்கிற்கு பிறகு டாஸ்மாக் கடைகள் திறந்த பின்னர் குறைந்தபட்சம் ரூ.10 முதல் ரூ.80 வரை விலை உயர்ந்துள்ளது.
எனவே தொழில்கள் மற்றும் வியாபாரம் இயல்பு நிலைக்கு திரும்பி மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்தால் தான் டாஸ்மாக் கடைகளில் விற்பனை மீண்டும் சூடு பிடிக்கும். அதுவரை இந்த சுணக்க நிலையே தொடரும்.
Related Tags :
Next Story