திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட 60 பவுன் நகைகளுடன் தலைமறைவாக இருந்த பெண் போலீஸ் கைது கோவை மாநகர கமிஷனர் நடவடிக்கை
திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட 60 பவுன் நகையை கோர்ட்டில் ஒப்படைக்காமல், தலைமறைவாக இருந்த பெண் போலீஸ் கைது செய்யப்பட்டார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்.
கோவை,
கோவை ஒண்டிபுதூரை சேர்ந்தவர் சொப்பன சுஜா (வயது 40). பெண் போலீசான இவர், சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் குற்றப் பிரிவில் வேலை பார்த்து வந்தார். அப்போது இவர் 11-க்கும் மேலான திருட்டு வழக்குகளில் குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 60 பவுன் நகைகளை கோர்ட்டில் ஒப்படைத்து உரியவர்களிடம் வழங்காமல் கையாடல் செய்தார்.
இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த, இன்ஸ்பெக்டர் சிவக்குமார் நியமிக்கப்பட்டார். ஆனால் சொப்பன சுஜா, விசாரணைக்கு ஒத்துழைக்காமல் விடுமுறை எடுத்து விட்டு தலைமறைவானார்.
பணியிடை நீக்கம்
இதையடுத்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண், கடந்த பிப்ரவரி மாதம் சொப்பன சுஜாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனால் தலைமறைவான அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் அவர், தனது பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்யுமாறு சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் முன்னிலையில் சரண் அடைந்து, பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு சொப்பன சுஜாவுக்கு உத்தரவிட்டார்.
மோசடி வழக்கு
ஆனால் அவர் ஐகோர்ட்டு உத்தரப்படி போலீஸ் கமிஷனர் முன்னிலையில் சரண் அடைய வில்லை. அதோடு அவர், ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து வந்தார். இந்தநிலையில் சொப்பன சுஜா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டார்.
இதையடுத்து நகையை சுருட்டியது தொடர்பாக அவர் மீது கோவை மாநகர குற்றப்பிரிவு (சி.சி.பி) போலீசில் இன்ஸ்பெக்டர் சங்கீதா புகார் செய்தார். மாநகர துணை கமிஷனர் உமா, உதவி கமிஷனர் சந்திரசேகர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் ஜமுனா ஆகியோர் சொப்பன சுஜா மீது மோசடி செய்தல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பெண் போலீஸ் கைது
இந்த நிலையில் கோவை ஒண்டிப்புதூரில் இருந்த சொப்பன சுஜாவை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட நகையை உரியவர்களிடம் ஒப்படைக்காமல் மோசடி செய்த பெண் போலீஸ் கைதான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story