தஞ்சையில் பாலியல் தொழிலில், இளம் பெண்கள் மிரட்டி ஈடுபடுத்தப்படுகிறார்களா? பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை


தஞ்சையில் பாலியல் தொழிலில், இளம் பெண்கள் மிரட்டி ஈடுபடுத்தப்படுகிறார்களா? பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 Jun 2020 4:06 AM IST (Updated: 4 Jun 2020 4:06 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் பாலியல் தொழிலில், இளம்பெண்கள் மிரட்டி ஈடுபடுத்தப்படுகிறார்களா? என்று பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சையில் பாலியல் தொழிலில், இளம்பெண்கள் மிரட்டி ஈடுபடுத்தப்படுகிறார்களா? என்று பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரத்த காயங்களுடன் இளம்பெண் மீட்பு

தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள சானூரப்பட்டி கடைவீதி அருகே உடலில் ரத்த காயங்களுடன் வட மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் 3 நாட்களுக்கு முன்பு நடந்து வந்தார். அவரை மாதர் சங்க நிர்வாகிகளும், செங்கிப்பட்டி போலீசாரும் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது குறித்து வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 20 வயதான அந்த பெண் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், பெங்களூருவில் இருந்து வீட்டு வேலை செய்வதற்காக அந்த பெண் தஞ்சைக்கு அழைத்து வரப்பட்டதும் தெரிய வந்தது.

பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம்

வீட்டு வேலை செய்வதற்காக தஞ்சை மேலவஸ்தாசாவடியை சேர்ந்த செந்தில்குமார்(வயது 44) வீட்டுக்கு வந்த அந்த பெண்ணுக்கு செந்தில்குமார் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவரது மனைவி ராஜம் என்பவரும் அந்த பெண்ணை பல்வேறு வகையிலும் துன்புறுத்தி உள்ளார்.

மேலும் அந்த பெண்ணை செந்தில்குமாரும், அவரது மனைவியும் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தி உள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த பெண்ணை கணவன்-மனைவி இருவரும் சேர்ந்து அடித்து உதைத்து உள்ளனர். கடந்த நான்கு மாத காலமாக அந்த பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் அவர்கள் ஈடுபடுத்தி வந்து உள்ளனர்.

காரில் இருந்து வீசப்பட்டார்

இந்த நிலையில் அந்த பெண்ணின் தாய்க்கு உடல்நிலை சரியில்லாத தகவல் அறிந்த அந்த பெண் ஊருக்கு போக வேண்டும் என கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த செந்தில்குமாரும் அவருடைய மனைவியும் அந்த பெண்ணை கட்டையாலும், கைகளாலும் சரமாரியாக தாக்கி உள்ளனர். பின்னர் செந்தில்குமார் மற்றும் ஒரு பெண் மேலும் இரண்டு ஆண்கள் என மொத்தம் 4 பேர் அந்த பெண்ணை காரில் ஏற்றிக்கொண்டு செங்கிப்பட்டி அருகே உள்ள பூதலூர் பிரிவு சாலை அருகே காரில் இருந்து வெளியே வீசி விட்டு சென்றுள்ளனர்.

இந்த தகவல்கள் அனைத்தும் அந்த பெண் கொடுத்த தகவலின் பேரில் தெரிய வந்தது. இது தொடர்பாக வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, செந்தில்குமார், அவருடைய மனைவி ராஜம் மற்றும் இரண்டு ஆண்கள் மீது வழக்கு பதிவு செய்து 4 பேரையும் தேடி வருகின்றனர்.

வீடுகளுக்கு அழைத்து சென்றதாக...

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இந்தி மட்டுமே தெரியும் என்பதால் அந்த பெண்ணால் முழு தகவல்களையும் சரிவர போலீசாரிடம் தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. மேலும் அவருடைய உடல்நிலையும் கடுமையாக பாதிக்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் போலீசாரின் விசாரணையில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படவில்லை.

அந்த பெண்ணை வீட்டு வேலைக்கு என அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய செந்தில்குமார், பல நாட்கள் அந்த பெண்ணை கொலை செய்து விடுவதாக மிரட்டி தஞ்சையில் உள்ள பல வீடுகளுக்கு பாலியல் தொழிலுக்கு அழைத்து சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த வீடுகளுக்கு அழைத்து சென்ற செந்தில்குமார், அந்த பெண்ணை அந்த வீட்டில் இருந்த பல ஆண்களுடன் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்துள்ளார்.

மிரட்டி ஈடுபடுத்தப்படுகிறார்களா?

அப்போது தன்னைப்போன்று மேலும் சில இளம்பெண்கள் அந்த வீட்டில் இருந்ததை பார்த்ததாக பாதிக்கப்பட்ட வடமாநில இளம்பெண் போலீசாரிடம் கூறி உள்ளார். இதனால் செந்தில்குமார் தலைமையிலான கும்பல் பல பெண்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதனால் இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார், தலைமறைவாக உள்ள செந்தில்குமார், அவரது மனைவி மற்றும் கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். செந்தில்குமார் கைது செய்யப்பட்டால்தான், வடமாநில இளம்பெண் கூறியதுபோன்று இளம்பெண்கள் பலர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்களா? அவர்கள் அனைவரும் எங்கு வைக்கப்பட்டுள்ளனர்? என்பது தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

திடுக்கிடும் தகவல்கள்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம்பெண் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் அவரை சம்பவம் நடந்த வீட்டிற்கும், இளம்பெண்கள் பலர் இருந்ததாக கூறப்படும் வீட்டிற்கும் நேரில் அழைத்து சென்று விசாரணை மேற்கொள்ள உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தலைமறைவாக உள்ள செந்தில்குமார் கைது செய்யப்பட்டால் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகும் என்றும், இதில் தொடர்புடையவர்கள் யார்? யார்? என தெரிய வரும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story