ஊரடங்கால், முடங்கி போன பொருளாதாரம்: இந்த ஆண்டு மொய்விருந்து விழா நடைபெறுமா? மொய் செய்தவர்கள் கலக்கம்


ஊரடங்கால், முடங்கி போன பொருளாதாரம்: இந்த ஆண்டு மொய்விருந்து விழா நடைபெறுமா? மொய் செய்தவர்கள் கலக்கம்
x
தினத்தந்தி 4 Jun 2020 4:36 AM IST (Updated: 4 Jun 2020 4:36 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கினால் பொருளாதாரம் முடங்கி போனதால் இந்த ஆண்டு மொய் விருந்து விழா நடைபெறுமா? என மொய் செய்தவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

திருச்சிற்றம்பலம், 

ஊரடங்கினால் பொருளாதாரம் முடங்கி போனதால் இந்த ஆண்டு மொய் விருந்து விழா நடைபெறுமா? என மொய் செய்தவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

மொய்விருந்து விழா

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம், பேராவூரணி மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடகாடு, கொத்தமங்கலம், குலமங்கலம், கீரமங்கலம், ஆலங்குடி ஆகிய பகுதிகளில் மொய் விருந்து விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த விழா ஆண்டுதோறும் ஆனி, ஆடி, ஆவணி ஆகிய மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.

இந்த 3 மாதங்களிலும் இந்த பகுதிகளில் கோடிக்கணக்கான பணம் புரளும். இந்த விழாக்களின்போது அசைவ உணவுகள் வழங்கப்படும். இந்த பகுதிகளில் வைக்கப்படும் கறி குழம்பிற்கு ஈடு இணை எங்குமே இல்லை என்பதே சாப்பாட்டு பிரியர்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. தனிமனித நாணயத்திற்கும், பொருளாதார உயர்வுக்கும் கை கொடுக்கும் விழாவாக 50 ஆண்டுகளுக்கு மேலாக மேற்கண்ட பகுதிகளில் மொய் விருந்து விழா நடத்தப்பட்டு வருகிறது.

பொருளாதார நெருக்கடி

வட்டியில்லா கடனாக வரும் மொய் பணத்தால், வாழ்க்கையில் உயர்ந்தவர்களும் உண்டு. மொய் பணத்தை திருப்பி செய்ய முடியாமல் திசைமாறி போனவர்களும் உண்டு. மொய் செய்பவர்களின் பொருளாதார உயர்வுக்கு பெரிதும் கை கொடுத்த தென்னை, மா, பலா உள்ளிட்ட மரங்கள் அனைத்தும் கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயலில் பெரும் பகுதி அழிந்தது.

இதனால் மொய் செய்தவர்களும், மொய் வாங்கியவர்களும் பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவித்தனர். பெரும்பாலானவர்கள் மொய் செய்வதில் இருந்து தங்களை கடந்த ஆண்டே விடுவித்து கொண்டனர்.

விழா நடைபெறுமா?

இந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பினை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கி போனது. மக்கள் அனைவரும் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆனி மாதம் பிறப்பதற்கு இன்னும் சில தினங்களே உள்ளன. ஆனி, ஆடி, ஆவணி ஆகிய மாதங்களில் மொய் விருந்து விழா நடைபெறுமா? என்ற சந்தேகத்தில் மொய் செய்தவர்களும், மொய் வாங்க காத்திருப்பவர்களும் கலக்கத்தில் உள்ளனர்.

சமூக இடைவெளி

சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மொய்விருந்து விழா போன்ற நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டு வைரஸ் தொற்று மென்மேலும் பரவும் அபாய நிலையும் உள்ளது.

எனவே இந்த ஆண்டு நடைபெற இருக்கும் மொய்விருந்து விழாவை இந்த ஆண்டு நடத்தாமல் அடுத்த ஆண்டு நடத்தினால் மட்டுமே மொய் விருந்து விழாவை வருங்காலங்களில் தொடர முடியும். இல்லையெனில், பெரும்பாலானவர்கள் மொய் பிடிப்பதில் இருந்து தங்களை விடுவித்து கொள்ள முன்வர நேரிடும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.

ஊர் கூட்டம்

மொய்விருந்து நடக்கும் காலங்களில் அரசு மதுபான கடைகளில் பல கோடி ரூபாய் வியாபாரம் நடக்கும். இதனால் அரசிற்கும் கூடுதல் வருவாய் கிட்டும். இதேபோன்று இந்த பகுதியில் திருமண மண்டபங்கள் வைத்திருப்பவர்கள், சமையல் கலைஞர்கள், மொய் எழுதுபவர்கள், டிஜிட்டல் பேனர் தயாரிப்பாளர்கள், பத்திரிக்கை அச்சடிப்பவர்கள் என மொய்விருந்து விழாவுடன் தொடர்புடைய எண்ணற்ற பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கடைக்கும்.

அனைவரும் மொய்விருந்து விழா நடக்கும் சமயங்களில் கை நிறைய வருமானம் பார்ப்பார்கள். ஆனால் அனைத்து தரப்பினரும் ஊரடங்கினால் பொருளாதாரத்தை இழந்து முடங்கி போய் காணப்படுகின்றனர். மொய் பிடிக்கும் ஊர்களில் தற்போது ஆங்காங்கே ஊர் கூட்டம் போட்டு விழாவை நடத்தலாமா? வேண்டாமா? என ஆலோசனை செய்து கொண்டு இருக்கிறார்கள். மொய் பிடிப்பவர்கள் ஊர் கூட்டத்தின் முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.

Next Story