ஊட்டி தலைமை தபால் நிலையத்தில் காவலாளி திடீர் சாவு போலீசார் விசாரணை


ஊட்டி தலைமை தபால் நிலையத்தில் காவலாளி திடீர் சாவு   போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 4 Jun 2020 4:47 AM IST (Updated: 4 Jun 2020 4:47 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி தலைமை தபால் நிலையத்தில் காவலாளி திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள சோலூர் கிராமத்தை சேர்ந்தவர் சித்தன்(வயது 56). ஊட்டி தலைமை தபால் நிலையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி ராஜேஸ்வரி(50). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் சித்தன் பணியில் இருந்தார். பின்னர் நேற்று காலை 9 மணிக்கு அதிகாரிகள், ஊழியர்கள், தபால்காரர்கள் பணிக்கு வந்தனர். அப்போது தபால் நிலையம் திறக்கப்படாமல் பூட்டி கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது காவலாளி சித்தன், தனது அறையில் படுத்து கிடந்தார். வெகு நேரமாக சத்தம் போட்டும் எழுந்து கதவை திறக்கவில்லை. பின்னர் ஊழியர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர் மயங்கிய நிலையில் கிடப்பது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஊட்டி நகர மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருமி நாசினி தெளிப்பு

ஊரடங்கால் கடந்த 2 மாதங்களாக அரசு பஸ் போக்குவரத்து இல்லாததால், காவலாளி சித்தன் தபால் நிலையத்திலேயே தங்கி இருந்து பணிபுரிந்து வந்தார். அவர் உடல்நிலை பாதித்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரியவரும்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி நகராட்சி சுகாதார அதிகாரிகள் விரைந்து வந்து, தலைமை தபால் நிலையத்தின் உள்பகுதி மற்றும் வளாகத்தில் கிருமி நாசினி தெளித்தனர். அதன் அருகில் உள்ள கோர்ட்டு, கலெக்டர், பி.எஸ்.என்.எல். அலுவலகங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

உத்தரபிரதேசத்தில் இருந்து ஊட்டிக்கு திரும்பிய தபால் அதிகாரி ஒருவர் கொரோனா பாதித்து, கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story