குறுவை சாகுபடிக்கு தேவையான விதை, உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது வேளாண்மை துறை இயக்குனர் தகவல்
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான விதை, உரங்கள் இருப்பு வைக்கபட்டுள்ளது என வேளாண்மை துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி கூறினார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான விதை, உரங்கள் இருப்பு வைக்கபட்டுள்ளது என வேளாண்மை துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி கூறினார்.
கருத்துக்கேட்பு
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறுவை சாகுபடி பணிகள் தொடர்பாக விவசாயிகளுடனான கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வேளாண்மை துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். அதனை தொடர்ந்து வருகிற 12-ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில் குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், பூச்சி மருந்துகள் ஆகியவை தேவையான அளவு இருப்பில் உள்ளதா? எனவும், ஆறு, வாய்க்கால் தூர்வாரப்பட்டு வருவது குறித்தும் விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டு துறை அலுவலர்களிடம் கலந்தாலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி இலக்கு 82 ஆயிரத்து 500 ஏக்கர் ஆகும். இதுவரை 16 ஆயிரத்து 209 ஏக்கர் அளவில் சாகுபடி நடைபெற்றுள்ளது. குறுவை சாகுபடிக்கு சான்று பெற்ற குறுகிய கால நெல் விதைகளான ஆடுதுறை 36, 37, 43, 45, 53, டி.கே.எம்.9, கோ 51, அம்பை 16, டி.பி.எஸ். 5 போன்ற ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை விற்பனை நிறுவனங்களில் 423 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
உரங்கள் கையிருப்பு
இதுவரை 628 டன் விதை வினியோகம் செய்யப்பட்டுள்ளது. விதை கிராம திட்டத்தில் 50 சதவீத மானியத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இந்த விதைகள் வினியோகம் செய்யப்படுவதை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
குறுவை சாகுபடிக்கு தேவையான உரங்களான யூரியா, டி.ஏ.பி, பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் மற்றும் பாஸ்பேட் உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் 4,645 டன் கையிருப்பு உள்ளது. நுண்ணுரம், உயிர் உரங்கள் போதுமான அளவு வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
வட்டியில்லா பயிர்க்கடன்
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம் 12 மணி நேரம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், உழவு மற்றும் நடவு பணிகளை மேற்கொள்ள 440 சுழல்கலப்பை, 2198 டிராக்டர்கள், 218 நடவு எந்திரங்கள் வேளாண்மை துறை மற்றும் வேளாண்மை பொறியியல் துறை மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு, அனைத்து வட்டார வாடகை மையங்களில் தயார் நிலையில் உள்ளன.
குறுவை சாகுபடி செய்திடும் விவசாயிகளுக்கு 137 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ.500 கோடிக்கு வட்டியில்லா பயிர்க்கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றை விவாசயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எந்திர நடவு முறை
முன்னதாக கீரனூர் கிராமத்தில் விவசாயி ஒருவர் வயலில் 7 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட எந்திர நடவு முறையினையும், கோனோவீடர் மூலம் களையெடுக்கும் பணியினையும் பார்வையிட்டார். அதே கிராமத்தில் விவசாயி ஒருவர் வயலில் 7 ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு மூலம் சாகுபடி செய்யப்பட்ட வயலினையும், நன்னிலம் வட்டாரம் குருங்குளம் கிராமத்தில் ஒரு விவசாயி 5 ஏக்கர் பரப்பில் எந்திர முறையில் நடவு செய்யப்பட்ட வயலுக்கு மேலுரம் இடும் பணியையும் பார்வையிட்டார்.
இதில் வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சிவக்குமார், வேளாண்மைத்துறை துணை இயக்குனர் சுந்தரம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹிப்சிபா நிர்மலா மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story