நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் பயணிகளுடன் ஆட்டோக்களை இயக்க அனுமதி டிரைவர்கள் கோரிக்கை


நீலகிரி மாவட்டத்தில்  கூடுதல் பயணிகளுடன் ஆட்டோக்களை இயக்க அனுமதி டிரைவர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 3 Jun 2020 11:33 PM GMT (Updated: 3 Jun 2020 11:33 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் பயணிகளுடன் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று டிரைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஊட்டி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் ஆட்டோக்கள் ஓட தடை விதிக்கப்பட்டது. கடந்த பல நாட்களாக ஆட்டோக்கள் சவாரி இல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை நம்பி ஆட்டோக்களை இயக்கி வந்த பெரும்பாலான டிரைவர்கள் வருவாய் இல்லாமல் பாதிக்கப்பட்டனர். அவர்கள் வாழ்வாதாரம் இழந்து அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்தனர்.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையை தவிர பிற மாவட்டங்களில் ஆட்டோக்கள் இயக்க தமிழக அரசு அனுமதித்தது. ஆட்டோவில் டிரைவர் மற்றும் ஒரு பயணி மட்டுமே பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதனால் ஒரு பயணிக்காக சில கிலோ மீட்டர் தூரம் சென்று வந்ததால் எரிபொருள் செலவு அதிகமானது. இதனால் ஆட்டோ டிரைவர்கள் பாதிக்கப்பட்டதோடு, 2 பேர் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

சுற்றுலா தலங்கள் மூடல்

அதன்பின்னர் ஊரடங்கு உத்தரவில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, ஆட்டோக்கள் 2 பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஆட்டோக்கள் 2 பயணிகளுடன் இயக்கப்பட்டது. ஊட்டியில் டிரைவர் மற்றும் 2 பயணிகள் ஆட்டோக்களில் பயணம் செய்தனர். சமூக இடைவெளி விட்டு 2 பேர் அமர்ந்து இருந்ததை காண முடிந்தது. அவர்கள் முகக்கவசம் அணிந்து இருந்தனர். டிரைவர்கள் கிருமி நாசினி கொண்டு ஆட்டோக்களை சுத்தம் செய்தனர்.

நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு, வெளியூர் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் அதிகம் பேர் ஆட்டோக்களில் பயணம் செய்வது இல்லை. மேலும் பல நாட்களுக்கு பின்னர் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு உள்ளதால், கிராமப்புறங்களில் இருந்து நகர்புறங்களுக்கு மக்கள் வருகை குறைவாக உள்ளது.

தவிப்பு

கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் இல்லாததால் ஆட்டோ டிரைவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சவாரி கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, கிராமப்புறங்களில் இருந்து சொந்த வாகனங்களில் வந்து பொருட்களை வாங்கி செல்கின்றனர். 2 பேருடன் ஆட்டோவை இயக்க அனுமதித்தது வரவேற்கத்தக்கது. இருந்தாலும், குடும்பத்தினர் 3 பேர் வந்தால் ஏற்ற இயலாமல் போகிறது. எனவே கூடுதல் பயணிகளுடன் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என்று டிரைவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story