நிசர்கா புயலுக்கு 3 பேர் பலி


நிசர்கா புயலுக்கு 3 பேர் பலி
x
தினத்தந்தி 4 Jun 2020 6:41 AM IST (Updated: 4 Jun 2020 6:41 AM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் நேற்று கரையை கடந்த நிசர்கா புயல் 3 பேர் உயிரை பறித்துள்ளது.

மும்பை,

மராட்டியத்தை மிரட்டிய நிசர்கா புயல் ராய்காட் மாவட்டம் அலிபாக் அருகே நேற்று மதியம் 1 மணிக்கு கரையை கடக்க தொடங்கியது. மாலை 4 மணிக்கு புயல் முழுவதுமாக கரையை கடந்தது. அப்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

நிசர்கா புயல் காரணமாக மும்பை, தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.

இந்தநிலையில் ராய்காட் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நேரத்தில் உமேத் கிராமத்தை சேர்ந்த தசரத் பாபு வாக்மரே(வயது58) என்பவர் மழையில் நனைந்தபடி வீட்டுக்கு ஓடோடி சென்று கொண்டிருந்தார். அப்போது பலத்த காற்றின் காரணமாக அங்குள்ள ஒரு மின்மாற்றி சரிந்து தசரத் பாபு வாக்மரே மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோல் புனே கெட் தாலுகாவில் காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்த போது, வீட்டின் சுவர் இடிந்து வஹகாவ் கிராமத்தை சேர்ந்த மஞ்ஜபாய் ஆனந்த் நவலே (வயது65) என்ற மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் ஹவேலி தாலுகாவில் உள்ள மோகர்வாடி கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் மோகர்(52) என்பவர் காற்றில் தூக்கி வீசப்பட்ட தனது வீட்டு தகர கூரையை பிடிக்க சென்ற போது காயம் அடைந்து உயிரிழந்தார்.

முஸ்லி தாலுகாவில் காற்றின் போது மின்கம்பி அறுந்து விழுந்ததில் 2 மாடுகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன.

இந்த நிலையில், கரையை கடந்த நிசர்கா புயல் தற்போது வடகிழக்கு மராட்டியம் நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

இதன் காரணமாக வடகிழக்கு மராட்டியத்தில் உள்ள நாசிக், துலே, நந்துர்பர் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

இதேபோல் புனே மாவட்டத்தின் வடமேற்கு பகுதி பாதிக்கப்படலாம் என்றும், புனே நகர் மற்றும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Next Story